இந்திய ரிசர்வ் வங்கி இன்று அறிமுகப்படுத்தும், டிஜிட்டல் ரூபாய்.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இன்று நவம்பர் 1 ஆம் தேதி மொத்த விற்பனைப் பிரிவில், மத்திய வங்கி ஆதரவுடன் டிஜிட்டல் ரூபாய்க்கான சோதனையை அறிமுகப்படுத்துகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் டிஜிட்டல் ரூபாய் – சில்லறை விற்பனை பிரிவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்தியாவில் ஒன்பது வங்கிகளில் இந்த டிஜிட்டல் ரூபாய் பயன்படுத்தப்பட உள்ளதாக ஆர்.பி.ஐ யின் அறிக்கையில் தெரிவித்தது. அவை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் எச்எஸ்பிசி ஆகிய ஒன்பது வங்கிகள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) அல்லது டிஜிட்டல் ரூபாய் என்பது மத்திய வங்கியால் வெளியிடப்படும் நாணயத் தாள்களின் டிஜிட்டல் வடிவமாகும். டிஜிட்டல் நாணயம் அல்லது ரூபாய் என்பது பணத்தின் டிஜிட்டல் (மின்னணு) வடிவமாகும், இது தொடர்பற்ற பணபரிவர்தனைக்காக பயன்படுத்தப்படுகிறது.
2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது டிஜிட்டல் நாணயத்தை விரைவில் வெளியிடும் என்று அறிவித்திருந்தார். கிரிப்டோகரன்சி என்பது பரவலாக்கப்பட்ட டிஜிட்டல் சொத்து மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பரிமாற்ற ஊடகமாகும்.
இருப்பினும், அதன் பரவலாக்கப்பட்ட தன்மை காரணமாக சர்ச்சைக்குரியதாக உள்ளது, அதாவது வங்கிகள், நிதி நிறுவனங்கள் அல்லது மத்திய அதிகாரிகள் போன்ற எந்த இடைத்தரகர்களும் இல்லாமல் கட்டுப்பாடற்ற முறையில் அதன் செயல்பாடு இருந்தது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வழங்கிய மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (சிபிடிசி) டிஜிட்டல் வடிவத்தில் சட்டப்பூர்வமாக இருக்கும்.
டிஜிட்டல் ரூபாய் பிட்காயின், எத்தேரியம் மற்றும் பிற கிரிப்டோ கரன்சிகளிலிருந்து வேறுபட்டதாக இருக்கும். பரிவர்த்தனை செலவைக் குறைப்பதைத் தவிர, டிஜிட்டல் நாணயத்தை வைத்திருப்பதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்பிற்குள் நடக்கும் அனைத்து பரிவர்த்தனைகளும் அரசின் கண்காணிப்பில் நடைபெறும் மேலும் அரசுக்கு இது எளிதாக்கும். இதனால் ஒவ்வொரு பரிவர்த்தனையின் மூலமும் நாட்டிற்குள் பணம் வேவ்வேறு வருகிறது மற்றும் எவ்வாறு செல்கிறது என்பதை அரசாங்கம் சிறப்பாகக் கட்டுப்படுத்தும்.
இது எதிர்காலத்திற்கான சிறந்த பட்ஜெட் மற்றும் பொருளாதாரத் திட்டங்களுக்கான இடத்தை உருவாக்க அனுமதிக்கும், மேலும் ஒட்டுமொத்தமாக மிகவும் பாதுகாப்பான சூழலை உருவாக்குகிறது” என்று அர்ச்சித் குப்தா கூறினார். டிஜிட்டல் நாணயம் கிழிந்து, எரிந்து சேதமடையாது, டிஜிட்டல் நாணயத்தின் உயிர்நாடி காலவரையற்றதாக இருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.