பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.
உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 2022-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்டிஸ்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைன் மனித உரிமைகள் அமைப்பான சிவில் லிபர்ட்டி மற்றும் ரஷிய மனித உரிமை அமைப்பான மெமோரியல் ஆகிய அமைப்புகளுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை ஆவணபடுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக அலெஸ் பியாலியாட்டிஸ் மற்றும் உக்ரைன், ரஷிய மனித உரிமை அமைப்புகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2022 ஆம் ஆண்டுக்கான இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.