உலகளாவிய ரீதியில் மைக்ரோசொஃப்ட் சேவைகள் முடக்கம்:  –Outlook, Teams உள்ளிட்ட பல சேவைகள் பாதிப்பு

Meiveli Media Team


உலகளாவிய ரீதியில் மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் முக்கிய இணையச் சேவைகளில் ஏற்பட்ட பாரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக Outloo. Microsoft Teams, Word,  Excel,  SharePoint,  OneDrive மற்றும் Copilot உள்ளிட்ட சேவைகள் கடந்த நேற்று வியாழக்கிழமை முதல் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தடங்கல் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிவாகியுள்ளதுடன், மின்னஞ்சல்களை அனுப்புதல், பெறுதல், இணையவழிக் கூட்டங்களில் பங்கேற்றல் மற்றும் அலுவலகப் பணிகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் தேசிய சுகாதார சேவை எனப்படும் NHS, பொலிஸ் துறைகள் மற்றும் சில அரச நிறுவனங்களும் இந்தத் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக,  சில பொலிஸ் பிரிவுகளின் இணையவழி முறைப்பாட்டுச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவசரமற்ற முறைப்பாடுகளைத் தொலைபேசி ஊடாக வழங்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சில பாடசாலைகளும் பெற்றோருடனான மின்னஞ்சல் தொடர்பாடல்களுக்குப் பதிலாகத் தொலைபேசி தொடர்புகளைப் பயன்படுத்தியுள்ளன. இதற்கிடையில், மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தனது சேவைகளை வழமைக்குக் கொண்டுவரத் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. சேவைகளின் மீட்பில் ஆரம்பகட்ட முன்னேற்றம் காணப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ள போதிலும், சில பயனர்கள் தொடர்ந்தும் இடையூறுகளை எதிர்கொள்ளக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தடங்கல் சைபர் தாக்குதலால் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் மைக்ரோசொஃப்ட் தெரிவித்துள்ளது.