புலம்பெயர்வோரின் படகைக் கத்தியால் வெட்டிய பிரித்தானியச் செயற்பாட்டாளர் டேனி டொமோ – நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்!
Meiveli Media Team

ஆங்கிலக் கால்வாயில் குடியேற்றவாசிகள் பயணித்த படகைக் கத்தியால் வெட்டிச் சேதப்படுத்திய குற்றச்சாட்டை பிரித்தானியச் செயற்பாட்டாளர் டேனி டொமோ நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார். டேனியல் தோமஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட 37 வயதான இவர், போர்ட்ஸ்மவுத் கிரவுன் நீதிமன்றத்தில் காணொளித் தொழில்நுட்பம் ஊடாக முன்னிலையாகியபோதே தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம் ஆங்கிலக் கால்வாயில் குடியேற்றவாசிகள் பயணித்த சிறிய படகொன்றுக்கு RNLI மீட்புப் படையினர், பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் பிரெஞ்சு கடலோரக் காவல்படையினர் உதவி வழங்கிக்கொண்டிருந்தனர்.
அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு சென்ற டேனி டொமோ, தனது படகை குடியேற்றவாசிகளின் படகுக்கு அருகில் செலுத்தி, கத்தியால் அதனை வெட்டிச் சேதப்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, குடியேற்றவாசிகள் பிரித்தானிய எல்லைக்குள் இருப்பதாகக் கூறி, படகிலிருந்து இறங்குமாறும் அவர்களைத் திருப்பி அனுப்புமாறும் அவர் கூச்சலிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தனது கைப்பேசியின் இரகசியக் கடவுச்சொல்லை பொலிஸாருக்கு வழங்க மறுத்தமை தொடர்பான மற்றொரு குற்றச்சாட்டை அவர் தொடர்ந்து நிராகரித்துள்ளார். படகுக்குச் சேதம் விளைவித்த குற்றத்துக்காக, சேதத்தின் பெறுமதியைப் பொறுத்து அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய சட்ட ஏற்பாடுகள் உள்ளன. குற்றத்தை ஒப்புக்கொண்டமைக்காகத் தண்டனையில் சலுகை வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் வரை டேனி டொமோ தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

