இஸ்லாமிய மதப் போதகர் ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கான தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிப்பு!

Meiveli Media Team

மலேசியாவில் வசித்து வரும் இஸ்லாமிய மதப் போதகர் ஜாகிர் நாயக்கின் தலைமையிலான இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு இந்திய மத்திய அரசு விதித்திருந்த தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. இந்திய உள்துறை அமைச்சு,  சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நவம்பர் 13ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் பிரகாரம், ஜாகிர் நாயக்கின் தலைமையிலான இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை தொடர்ந்தும் சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்பும் அதன் உறுப்பினர்களும் பல்வேறு மத சமூகங்களுக்கு இடையில் பகைமையையும் வெறுப்புணர்வையும் தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாக இந்திய உள்துறை அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், ஜாகிர் நாயக்கின் உரைகளும் அறிக்கைகளும் மதங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வைத் தூண்டுவதாகவும், இளைஞர்களை பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடத் தூண்டக்கூடிய வகையில் அமைந்துள்ளதாகவும் அமைச்சின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச செய்மதித் தொலைக்காட்சி வலைப்பின்னல்கள், இணையத்தளங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக, உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான மக்களைச் சென்றடையும் வகையில் ஜாகிர் நாயக் உரைகளை நிகழ்த்தி வருவதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தடையை மேலும் நீடிக்காவிட்டால், குறித்த அமைப்பு மீண்டும் தனது செயற்பாடுகளை ஆரம்பித்து, இந்தியாவின் மத நல்லிணக்கத்திற்கும் மதச்சார்பற்ற கட்டமைப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மத்திய அரசு தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு 1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்குஇ முதன்முதலாக 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்து ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.