2027  தேர்தலை இலக்காகக் கொண்டு அமித் ஷா மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்திற்குத் திட்டம்!

Meiveli Media Team


2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் மாநிலம் தழுவிய விரிவான அரசியல் சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் முன்னேற்பாடுகளை வலுப்படுத்துவதையும்,  கட்சியின் அமைப்புக் கட்டமைப்பை அடிமட்டம் வரை பலப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டு இந்தச் சுற்றுப்பயணம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது உத்தரப் பிரதேசத்தின் ஆறு அமைப்பு ரீதியான பிராந்தியங்களுக்கும் அமித் ஷா விஜயம் செய்யவுள்ளதுடன், ஒவ்வொரு பிராந்தியத்திலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தனித்தனியான சந்திப்புகளையும் நடத்தவுள்ளார். முதற்கட்டமாக நவம்பர் மாதத்திலேயே இரண்டு பிராந்தியங்களுக்கான விஜயங்களை மேற்கொள்ள பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தின்போது ஒவ்வொரு பிராந்தியத்திலும் இரவு தங்கியிருந்து, உள்ளூர் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவும் அமித் ஷா திட்டமிட்டுள்ளார். குறிப்பாக,  எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் வியூகங்கள், கட்சியின் அமைப்புக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்தச் சந்திப்புகளில் ஆராயப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட மட்டத்திலான கட்சிக் கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களையும் நடத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2027ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, மாநிலம் முழுவதும் கட்சியின் அரசியல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளை முன்கூட்டியே தீவிரப்படுத்தும் நகர்வாக அமித் ஷாவின் இந்தச் சுற்றுப்பயணம் அமைந்துள்ளது.