உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிவாஜிலிங்கம் – வீட்டுக்குச் சென்று மனைவியிடம் விசாரணை நடத்திய பயங்கரவாத தடுப்புப் பிரிவு!

Meiveli Media Team


பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் வல்வெட்டித்துறை நகர பிதா எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வீட்டுக்குச் சென்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமைக்கு, தமிழ் தேசியக் கட்சியின் தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான என். சிறிகாந்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள சிவாஜிலிங்கத்தின் இல்லத்துக்குச் சென்ற பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், அவரது மனைவியிடம் நீண்ட நேரம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சிவாஜிலிங்கம் முன்னிலையாக வேண்டும் எனக் குறிப்பிட்டு அழைப்பாணை ஒன்றையும் வழங்கிச் சென்றுள்ளனர்.

சட்டத்தரணி என்ற வகையில், சிவாஜிலிங்கத்தின் குடும்பத்தினர் இந்த விடயத்தைத் தமக்கு அறிவித்துள்ளதாக என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,  உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் சிவாஜிலிங்கத்தின் தற்போதைய உடல்நிலையைக் கருத்திற்கொள்ளாமல், அவரது குடும்பத்தினரை மேலும் துன்பத்திற்குள்ளாக்கும் வகையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் செயற்பட்டுள்ளமை வன்மையான கண்டனத்துக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது மனைவியிடம் நீண்ட நேரம் விசாரணைகளை முன்னெடுத்தமைஇ குடும்பத்தினருக்கு மேலதிக நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வல்வெட்டித்துறை நகர சபையின் நகர பிதாவான எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.