தமிழர்களின் இழப்புகளுக்கு சலுகைகளும் பாலங்களும் தீர்வல்ல; உரிமையே அவசியம் – சாணக்கியன் நாடாளுமன்றத்தில் ஆவேசம்!

Meiveli Media Team


தமிழ் மக்கள் இழந்த உறவுகளின் ஆன்மாக்கள் எதிர்பார்ப்பது அரசாங்கத்தின் சலுகைகளையும் பாலங்களையும் அல்ல, மாறாக அரசியல் உரிமைகளையே என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார். நாட்டில் பணவீக்கமும் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ள நிலையில், நடுத்தர மற்றும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் வரவு செலவுத் திட்டத்தில் போதியளவில் இடம்பெறவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், எதிர்வரும் தேர்தல்களைக் கருத்திற்கொண்டே அரசாங்கம் மக்களுக்கான நிவாரணங்களைத் தாமதப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை,  ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் எவ்வித அறிவிப்பும் இடம்பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கார்த்திகை மாதத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களைத் துப்புரவு செய்து மக்கள் தமது உறவுகளை நினைவுகூரும் நிலையில், பாலங்கள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளை முன்வைத்துவிட்டு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் புறக்கணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும்இ வவுனியா மாவட்டத்தின் கிவுல் ஓயா திட்டம் தமிழ் மக்களின் காணி மற்றும் விவசாய நிலங்களைப் பாதிக்கும் எனக் குற்றஞ்சாட்டிய அவர், மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கும் அரசாங்கம் உரிய தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகள் தொடர்பில் அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.