அநுரவின் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக சஜித், ஹர்ஷ, கபீர், பேராசிரியர் பிரசன்ன கூட்டணி!

Meiveli Media Team


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமையை மறைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக சாதாரண மக்கள் மீது அதிக வரிச்சுமையைச் சுமத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் பங்கேற்ற கலந்துரையாடலில் அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 22 மில்லியன் மக்களினதும் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், தற்போதைய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை மீளாய்வு செய்து புதிய உடன்படிக்கையொன்றை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும்,  அரசாங்கத்தின் செலவினங்கள், கணக்காய்வு அறிக்கைகள் மற்றும் வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளின் நடைமுறைப்படுத்தலைக் கண்காணிப்பதற்காக எதிர்க்கட்சியின் ஆதரவுடன் oversight.lk‘ என்ற புதிய இணையத்தளமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் தகுதியான குடும்பங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், வறுமை நிலைமையை மதிப்பிடுவதற்கான அரசாங்கத்தின் கணக்கீடுகள் மக்களின் உண்மையான வாழ்க்கைச் செலவுகளைப் பிரதிபலிக்கவில்லை என்றும் சஜித் விமர்சித்துள்ளார். அத்துடன், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு உதவுவதற்காக விசேட அபிவிருத்தி வங்கியொன்றை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மின்சாரக் கட்டணக் குறைப்பு, எரிபொருள் விலை மற்றும் பெறுமதி சேர் வரி நீக்கம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள் தொடர்பில் எதிர்க்கட்சியின் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.