வடக்கின் நான்கு பிரதான வைத்தியசாலைகளையும் மத்திய அரசின் கீழ் கொண்டுவரத் திட்டம் – 13ஆவது திருத்தத்தின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றனவா?
Meiveli Media Team

வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள நான்கு பிரதான மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டத்தை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்க, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் முன்வைத்துள்ளார். மாகாண சபைகளுக்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள சுகாதாரத்துறை அதிகாரங்கள் தொடர்பில் இந்த முன்மொழிவு புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள மன்னார், முல்லைத்தீவுஇ கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கும், அவற்றின் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் மாகாண சபையிடம் போதிய நிதி வசதிகள் இல்லை என்ற காரணம் இந்தத் திட்டத்திற்காக முன்வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகள் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. இந்நிலையில், வடக்கின் மேலும் நான்கு பிரதான வைத்தியசாலைகளையும் மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான முன்மொழிவு வெளியாகியுள்ளது. இதேவேளை, கம்பஹா மற்றும் அவிசாவளை பகுதிகளில் உள்ள மேலும் இரண்டு வைத்தியசாலைகளையும் அந்தந்த மாகாண சபைகளின் நிர்வாகத்திலிருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றுவதற்கான திட்டமும் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், வடக்கு மாகாண சபையின் அதிகார வரம்பு மற்றும் சுயநிர்வாகம் தொடர்பில் புதிய கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறை அதிகாரங்கள் நடைமுறையில் எவ்வாறு பேணப்படும் என்ற விவாதமும் உருவாகியுள்ளது. ஏற்கனவே மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழுள்ள பாடசாலைகள், தேசிய பாடசாலைகள் என்ற பெயரில் மத்திய அரசின் நிர்வாகத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில்இ தற்போது வைத்தியசாலைகள் விவகாரத்திலும் மத்திய அரசின் தலையீடு அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வடக்கின் நான்கு பிரதான வைத்தியசாலைகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றால், ஏனைய சிறிய வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களை மாத்திரமே மாகாண சபை நிர்வகிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பாதுகாப்பதா அல்லது அபிவிருத்தி என்ற பெயரில் அவற்றை மத்திய அரசின் கீழ் ஒருங்கிணைப்பதா என்ற விவாதத்தை ஜனாதிபதியின் இந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

