இந்தியா சென்ற ரில்வின் சில்வா – ஜெய்சங்கருடன் முக்கிய சந்திப்பு
Meiveli Media Team

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை, இலங்கை ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் இன்று புதுடெல்லியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஜெய்சங்கர், ரில்வின் சில்வா மற்றும் இலங்கை பிரதிநிதிகளை சந்தித்ததில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான ஆழமான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து நல்லதொரு கலந்துரையாடல் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக, அதன் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ரில்வின் சில்வா தலைமையிலான இந்த ஐந்து பேர் கொண்ட ஜே.வி.பி. குழுவின் இந்தியப் பயணம், இந்திய ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரில் இடம்பெற்றுள்ளது.
இரு கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் தொடர்புகளை வலுப்படுத்துதல், அமைப்பு ரீதியான அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் கட்சி உறவுகளை மேலும் ஆழப்படுத்துதல் ஆகியவை இந்தப் பயணத்தின் நோக்கங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் ரில்வின் சில்வாவுடன் சந்திரிகா அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் அபுபக்கர் ஆதம்பாவா, கபிலன் சுந்தரமூர்த்தி மற்றும் கல்பனா மதுபாஷினி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
ரில்வின் சில்வாவின் இந்தப் பயணம், இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குப் பின்னர் அவர் மேற்கொள்ளும் இரண்டாவது இந்தியப் பயணமாகும்.

