திலீபன் நினைவேந்தலை தடுப்பது மாண்புக்கு எதிரானது – யாழ். சர்வமத பேரவை கண்டனம்

Meiveli Media Team

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை தடுப்பது, குழப்புவது அல்லது அதனை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்த முயற்சிப்பது மனித மாண்புக்கு எதிரானது என யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமத பேரவை தெரிவித்துள்ளது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தில் இருந்து அவரது சிலை அகற்றப்பட்டமை தொடர்பாக சர்வமத பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசை, சர்வாதிகாரம், இனவாதம் மற்றும் மதவாதம் போன்றவற்றை களைவதற்காக அகிம்சை வழியிலான முன்னெடுப்புகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என பேரவை குறிப்பிட்டுள்ளது. இந்த அடிப்படையில், வன்முறையை கடந்து வாழ்வை உறுதி செய்வதற்காக தனது உயிரை அர்ப்பணித்த திலீபனை மதிப்புடன் நினைவுகூருவதாகவும், அவரை அவமதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், வரலாற்று அடையாளங்களையும் பன்மைத்துவத்தையும் மதித்து, அனைத்து மக்களும் தங்களுக்குரிய உரிமைகளுடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் எனவும் பேரவை வலியுறுத்தியுள்ளது. மக்களின் மாண்பு, சமத்துவம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை முன்னிறுத்தும் மக்கள் அரசியலை கட்சி அரசியல் இருட்டடிப்பு செய்யக் கூடாது எனவும், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது அரசியலை அதற்குரிய வரையறைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை, சமய நோக்கங்களுக்கு அப்பால் நினைவேந்தல் என்பது மனித உரிமையுடன் தொடர்புடைய விடயம் என சுட்டிக்காட்டியுள்ள சர்வமத பேரவை, நினைவுகூரும் உரிமை கலாசார வாழ்வில் பங்கேற்பதற்கான உரிமையுடனும் தொடர்புபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆன்மிக அடிப்படையில் நினைவேந்தலை தடுப்பது, குழப்புவது அல்லது அதனை வேறு தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது மனித மாண்புக்கு எதிரானது எனவும் பேரவை குறிப்பிட்டுள்ளது. அகிம்சை வழியில் வாழ்வை உறுதி செய்வதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்ட யாழ். மண்ணின் வரலாற்றில் திலீபன் முக்கியமான ஆளுமை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, திலீபனின் நினைவேந்தலுக்கு அவமானம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் கைவிட்டு, சாதாரண மக்கள் அமைதியான முறையில் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமத பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.