காங்கேசன்துறையில் 187 ஏக்கர் காணி பாதுகாப்புப் படையினரால் விடுவிப்பு!

Meiveli Media Team


காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குச் சொந்தமான காணிகளில் 187.56 ஏக்கர் காணி பாதுகாப்புப் படையினரால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த காணிக்கான ஆவணங்கள் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் நேற்று புதன்கிழமை கையளிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் டபிள்யு எம் ஏ எம் நிசங்க, காணி விடுவிப்பு தொடர்பான ஆவணங்களை மாவட்டச் செயலாளரிடம் கையளித்துள்ளார்.

காங்கேசன்துறையில் புதிதாக அமைக்கப்படவுள்ள முதலீட்டு வலயத்திற்காக 351.23 ஏக்கர் அரச காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் இந்த காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், முதலீட்டு வலயத்தை உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முதலீட்டு வலயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிப் பரப்புக்குள் பாதுகாப்புப் படையினரால் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 187.56 ஏக்கர் காணியும் உள்ளடங்குகின்றது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பெருமளவான காணிகள், யுத்த காலத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன. இதன் காரணமாக, குறித்த காணிகள் பல தசாப்தங்களாக பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில், தற்போது அவற்றில் ஒரு பகுதி உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரித்து, புதிய முதலீடுகளையும் தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கும் நோக்கில் காங்கேசன்துறையில் முதலீட்டு வலயம் அமைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த காணி விடுவிப்பு, குறித்த முதலீட்டு வலயத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முக்கிய கட்டமாக அமைந்துள்ளது.