ரணிலின் வீட்டிற்கு அருகில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் குறித்து சர்வதேச கோரிக்கை.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது அவரது தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் வைத்து ஊடகவியலாளர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த பக்கச்சார்பற்ற குழுவொன்றை நியமிக்குமாறு உலகின் மிகப்பெரிய ஒலிபரப்பு தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை பொலிஸாரும் பாதுகாப்பு அதிகாரிகளும் எம்.டி.வி. தனியார் நிறுவன ஊடகவியலாளர்கள் மீதான வெறுக்கத்தக்க தாக்குதலுக்கு உலக ஒலிபரப்பு ஒன்றியம் (World Broadcasting Unions – WBU) கண்டனம் வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தும் முயற்சிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதில்கள் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாக அறிக்கை அந்த ஒன்றியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“எந்தவொரு ஊடகவியலாளரும் அல்லது அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களும் அதனுடன் தொடர்புடைய வேறு எந்த நபரும் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களால் அச்சுறுத்தப்படவோ, துன்புறுத்தப்படவோ அல்லது தாக்கப்படவோ இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு WBU அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது.”
ஊடகவியலாளர்கள் மீது பொலிஸாரும் பாதுகாப்பு உத்தியோகத்தரும் அநியாயமாக தாக்குதல் நடத்தியதை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ள விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள உலக ஒலிபரப்பு ஒன்றியம் குறித்த ஊடகவியலாளர்கள் பொலிஸாரை அச்சுறுத்தவில்லை எனவும், இதனால் இந்த தாக்குதல் சுதந்திர ஊடக உரிமைகளை கடுமையாக மீறுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான ரோஹினி மாரசிங்க, ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டு, தாக்குதல் இடம்பெற்ற தினத்தில் பொலிஸாருக்கு ஊடகவியலாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கவில்லை என்பதில் சந்தேகமில்லை என வலியுறுத்தியுள்ளார்.
ஜூலை 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட தொடர்புடைய செய்தி அறிக்கை மற்றும் சிறிது நேரத்திற்குப் பின்னர் பிரதமரின் வீட்டை எரியூட்டியமை தொடர்பாக எம்.டி.வி அலைவரிசையின் சிரேஷ்ட நிர்வாகத்தின் பல உறுப்பினர்கள் தன்னிச்சையாக பொலிஸுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக உலக ஒலிபரப்பு ஒன்றியம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு உத்தரவைப் பிறப்பித்து அறிக்கையிடலில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் குழுவைத் தாக்கியமைக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே நேரடிப் பொறுப்பு என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகேவின் உத்தரவின் பேரில் கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதில் நியூஸ்பெர்ஸ்ட் ஊடகவியலாளர்கள் பலர் காயமடைந்தனர்.
சரசி பீரிஸ், காளிமுத்து சந்திரன், இமேஷ் சதர்லண்ட், சானுக வீரகோன், பனிந்து லொகுருகே, வருண சம்பத், ஜூடின் சிந்துஜன் மற்றும் ஜனிதா மென்டிஸ் ஆகியோரின் பெயர்கள் சிரச ஊடக வலையமைப்பினால் குறிப்பிடப்பட்டுள்ளன.