கொழும்பு – தலைமன்னார் இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்: போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க அறிவிப்பு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாரிற்கும் இடையிலான ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
> “இன்று முதல் கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரை 4003 இலக்க ரயில் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. தினமும் பிற்பகல் 3:50 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தலைமன்னார் நோக்கி இந்த ரயில் புறப்படும்.
> அதேபோன்று, மறுநாள் காலை 4:10 மணிக்கு தலைமன்னாரிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி தனது பயணத்தை மேற்கொள்ளும். இந்த ரயில் சேவையானது தினமும் இருமார்க்கங்களிலும் தொடர்ச்சியாக இடம்பெறும்.
> முக்கியமாக, எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள மடு மாதா தேவாலயத்தின் பெருவிழாவை முன்னிட்டு, அங்கு வருகை தரும் பக்தர்களின் போக்குவரத்துத் தேவைகளை இலக்காகக் கொண்டே ரயில்வே திணைக்களத்தினால் இந்த ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.”
>
இச்சேவை மூலம் மடுத் திருவிழாவிற்குச் செல்லும் பக்தர்கள் உட்பட வட பகுதிப் பயணிகள் பெரும் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.