எதிர்க்கட்சிகளை அடக்குவதை விட்டு குற்றங்களை கட்டுப்படுத்துங்கள்: அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மறுசீரமைப்பு, நாட்டின் நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்றைய தினம் பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

கட்சியின் புதிய கட்டமைப்பு மாற்றங்கள் குறித்து அவர் குறிப்பிடுகையில், நாட்டின் எதிர்கால அரசியலுக்கு இளைஞர் தலைமுறையின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என்றும், அதற்கமைய தெய்வேந்திரமுனை முதல் பருத்தித்துறை வரை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொகுதி மட்டத்தில் புதிய இளைஞர் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கட்சியின் கொள்கைகளை நம்பும் இளைஞர்களை ஒருங்கிணைத்து அடிமட்ட அளவில் ஒரு பலமான அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, நாட்டின் நீதித்துறை அரசியல் தலையீடுகளின்றி சுயாதீனமாக இயங்க வேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியாக உள்ளதாகத் தெரிவித்த அவர், நீதித்துறை மற்றும் பொலிஸ் கட்டமைப்பை அரசாங்கம் அரசியல்மயமாக்குவதைத் தடுக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

நீதிபதிகள் நியமனத்தில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் பொலிஸாரைப் பயன்படுத்தி அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படுவது குறித்தும் அவர் இதன்போது தனது கவலையை வெளியிட்டார்.
சர்வதேச ரீதியில் நாட்டிற்குப் பெரும் புகழைத் தேடித்தந்த தடகள வீரர் யுபுன் அபேகோன் குறித்துப் பேசிய அவர், அரசாங்கம் கோடிக்கணக்கில் நிதி செலவழித்து பெற முடியாத உலகளாவிய கவனத்தையும் அங்கிகாரத்தையும் யுபுன் தனது திறமையால் நாட்டிற்குப் பெற்றுக்கொடுத்தார் எனப் பாராட்டினார்.

விளையாட்டிலிருந்து ஓய்வுபெறும் முடிவு அவருடைய தனிப்பட்டது என்ற போதிலும், எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளிலும் அவர் பங்கேற்க வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனத் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்த நாமல் ராஜபக்ச, எதிர்க்கட்சியினரை முடக்குவதிலேயே அரசாங்கம் முதன்மை கவனம் செலுத்தி வருவதாகவும், இதன் காரணமாகவே நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதை விடுத்து, முறையான விசாரணைகளை நடத்துமாறு அரசாங்கத்திற்குச் சவால் விடுத்த அவர், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் உறுதியளித்தார்.

இறுதியாக, அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குத் தமது கட்சி ஆதரவளிக்கும் எனக் குறிப்பிட்ட அவர், நாடாளுமன்றத்தில் 159 பெரும்பான்மை பலம் உள்ளது என்பதற்காக அரசாங்கம் செய்யும் தவறுகள் சரியாக மாறாது என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், 2029ஆம் ஆண்டு அரசியல் நகர்வுகள் குறித்து அந்தந்த காலகட்டங்களிலேயே தீர்மானிக்கப்படும் என்றும், தற்போதைய முதன்மை நோக்கம் மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவதே ஆகும் என்றும் கூறி தனது ஊடக சந்திப்பை நிறைவு செய்தார்.