ரணில் விக்கிரமசிங்கவின் மீது கடும் அதிருப்தியில் பிரித்தானியா தாராளவாத ஜனநாயகக் கட்சி.

தமிழர் இனப்படுகொலையை அங்கீகரிக்க வேண்டும் என புதிய பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் .

FAO Foreign Secretary 22.09.22

சிறிலங்காவின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின்மீது தாம் கடும் அதிருப்தி கொண்டிருப்பதாக பிரித்தானிய தாராளவாத ஜனநாயக் கட்சித் தலைவாரான மேதகு சேர். எட்வேட் டேவி (Rt. Hon. Sir Ed Davey MP)மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகாரப் பேச்சாளராருமான மேதகு. சாரா ஓல்னி (Hon. Sarah Olney MP) ஆகியோர் இணைந்து பிரித்தானியாவின் புதிய வெளிவிவகார அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் புதிய அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேதகு. ஜேம்ஸ் கிளவெர்லே (Rt. Hon James Cleverly MP) அவர்களுடனான சந்திப்பொன்றினை வேண்டி அவருக்கு எழுதிய கடிதத்திலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.

சிறிலங்காவில் தற்போதுள்ள பொருளாதார, அரசியல் மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டிய அவர்கள், ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின்கீழ் நடைபெறும் அடக்குமுறைகள் தொடர்பாக தங்கள் கரிசனையை வெளிப்படுத்தியதுடன் அங்கு நிலவும் உணவு, மருந்துப்பொருட்கள், எரிபொருள் தட்டுப்பாடுகளால் பல மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

சிறிலங்காவிலுள்ள குடிமக்கள் ஒரு அரசியல் சீர்திருத்தத்தைக் கோரி வீதிகளில் இறங்கும்போது, பிரித்தானிய அவர்களுக்கு துணை நிற்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்கள். அத்துடன், அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக நீண்டகாலமாக நடைபெற்றுவரும் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பாக தங்கள் கரிசனையை வெளிப்படுத்த விரும்புவதாகவும் அவர்கள் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மிக முக்கியமாக இலங்கையில் நடந்த தமிழர் இனப்படுகொலையை பிரித்தானிய அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்றும், இது விடயத்தில் பிரித்தானிய அரசாங்கம் பாராமுகமாக இருக்கமுடியாது என்றும் வலியுறுத்தியுள்ளார்கள். மேலும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, உரிய தண்டனை வழங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்பதை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வலியுறுத்தவேண்டும் என்றும் வெளியுறவுச்செயலரைக் கேட்டுக்கொள்வதாக அவர்கள் இருவரும் வெளிப்படுத்தியுள்ளார்கள். இக்கடிதத்தின் பிரதி கிழே இணைக்கப்பட்டுள்ளது.