மெய்வெளியின் “காத்தாயி காதை”
- பல்துறைப் புலமையாளர்களின் பார்வை -
– பேராசிரியர் மு.நித்தியானந்தன் –
மலையக இலக்கிய மாநாட்டில் அரங்கேறிய மெய்வெளியின் ‘காத்தாயி காதை’ நேரடி நாடகமாக அமையாமல், stylised play ஆக மிக நேர்த்தியாக நிகழ்த்தப்பட்டது. சாம் பிரதீபனின் செறிவான எழுத்துரு நாடக வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. நடிப்பில் நன்கு பண்பட்ட ரஜித்தா காத்தாயி பாத்திரத்தை ஏற்று பார்வையாளர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தார். அரங்கில் பலர் கண்கலங்கி நின்றனர். ஓவியர் ராஜா அடுத்த நிகழ்ச்சியை அறிவிக்கவந்தவர் தளதளத்த குரலில் கண்ணீர் மல்க மேடையில் நின்றார்.உரைகளாகத் தொடர்ந்து கொண்டிருந்த மாநாட்டு நிகழ்வில் பொருத்தமான வேளையில் ‘காத்தாயி காதை’ குறுக்கீடு செய்து அவையோரின் பெருங் கவனத்தை ஈர்த்தது. மாநாட்டு நிகழ்வின் மகுடமாக ‘காத்தாயி காதை’ நிகழ்வு அமைந்தது. ரஜித்தா காத்தாயியாகவே மாறிப்போயிருந்தார். அவையோரை நாடகம் உலுக்கி எடுத்திருந்தது. காத்தாயியின் பேரை தமிழர்கள் மத்தியில் மாத்திரமல்ல, ஒரு கொடுங்கோன்மைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் நடந்தேறி முடிந்த ஓர் அவலக்கதையை – அப்பட்டமான மனித உரிமை மீறலை உலகெங்கும் எதிரொலிக்கச் செய்யும் அரசியல் பணியாகவும் இது அமைகிறது. நாடக ஒத்திகைகளுக்கு நேரத்தையும், இடத்தையும் கண்டு பிடித்து, நாடகத்தை தூக்கி நிறுத்திய ஆடை, ஒப்பனைகளும் ஒரு தொழில்முறை நாடக நேர்த்தியை வெளிப்படுத்தியிருந்தது. சாம் பிரதீபனுடன் ரஜித்தா, சுஜித், காண்டீபன், அலன், றித்திக், அனுஷன் ஆகியோருக்கும் ஏனைய நாடகக்குழுவினருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
– நவரட்ணராணி –
காத்தாயியாக , உருக, உருகத் தன் நடிப்பாற்றலைப் பிழிந்து , அந்த அபலைப் பெண்ணின் ஈனக் குரலையும் கதறலையும் எத்துரு அற்புதமாய் சுவீகரித்துப் பிரதிபலித்தார் ரெஜித்தா சாம் அவர்கள். அடடா..அதி அற்புதம். மெய்சிலிர்த்துக் கண் பனித்தனர் சபையோர்.
போராளியக வந்தவரின் தீரமான நடிப்பும்., கருங்காலிகள் எனும் அரச படகளாக உருமாறிய அச்சின்ன விடலைகளின் திடமும், கம்பீரமும் சொல்லில் அடங்கா. மேலாக , ஓலி அமைப்பை திறம்பட இயக்கிய சிறுமிகள் சிறப்பாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
பெருச்சாளிகளாய், காட்டிக் கொடுக்க அலையும் தீவட்டிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு, அநியாயமாக, மானுடம் மறந்த , மறுத்த ஆதிக்கக் காட்டுமிரண்டி வெறியர்களால் பொசுக்கப்பட்ட பேதையின் வாழ்வையும் , கொடுமையான மரணத்தையும் சொற்ப நேரத்தில் அபாரமாய் கச்சிதமாய் சித்தரிக்க “ சாம்பிரதீபனால்” மட்டுமே முடிந்தது…முடியும். எண்ணில் அடங்காப் பாராட்டு வாழ்த்துகளோடு என் ஆரத்தழுவிய ஆராதனைகள் “ மெய்வெளி” குழுமத்தினருக்கு.
– புதியவன் இராசையா –
மட்டக்களப்புக்கும் பதுளைக்கும் இடையில் பண்ட, ஆயுத பரிவர்த்தனை நடந்து கொண்டிருந்த காலம்.
தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு மலையகத்திலும் ஒரு ஆதரவு அலை வீசிக்கொண்டிருந்தது.
பதுளையைச் சேர்ந்த காத்தாயி யும் அந்த அலையினுள் அகப்பட்ட ஒரு அப்பாவி சீவன்.
1994 ஆம் ஆண்டு ஆயுதப் படைகளால் கைதுசெய்யப்பட்ட காத்தாயி எவ்விதமான சித்திரவதைகளை அனுபவித்திருப்பார் என்பதை வெலிக்கட சிறையில் இருந்தவர்களே சாட்சி.
விசாரணை அற்று சில வருடங்கள். சிறைத்தண்டனையோடு பல வருடங்கள். 2009 யுத்தம் முடிந்தது. பிள்ளையானும் கருணாவும் பெரிய பதவிகளில் சென்று அமர்ந்தார்கள்.
மலையக மக்களின் குடியுரிமை பறிபோக காரணமாய் அமைந்தவர்களில் ஒருவரின் பேரன் இரண்டு தேசங்களை அமைத்துக்கொள்ள பேயாய் திரிந்துகொண்டிருந்தார்.
சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரை சிறையில் அடைக்கும் அளவுக்கு வாக்கு வாதம் செய்யக்கூடிய சுமந்திரன் வாயடைச்சு துண்டை கட்டி அலைந்த காலம். காத்தாயி புற்று நோயிலே அவதிப்பட்டுக் கொண்டு வெலிக்கட சிறையிலே துடித்துக் கொண்டிருந்தார்.
2014ல் புற்று நோய்க்கு தன்னை பறிகொடுத்து இயற்கையுடன் இணையும் வரை எந்தத் தமிழ் அரசியல் வாதிக்கோ , புலிப் பினாமிகளுக்கோ எதுவித அக்கறையும் இருக்கவில்லை.
அண்மையில் Kanagasabai Krishnarajah அவர்களுடன் நண்பர்கள் பலர் இணைந்து ஈஸ்ராம் றினிற்றி சென்ரர் இல் ஏற்பாடு செய்திருந்த “மலையக இலக்கிய மாநாடு” மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.
மதிய உணவுக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது சாம் பிரதீபன் மற்றும் பிறேமலதா சாம் பிரதீபன் இணைந்து வழங்கிய நாடக ஆற்றுகை வந்திருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது காத்தாயி காதை.
சாம் நெறியாழ்கையில் பிறேமலதா சாம் காத்தாயி ஆகத் தோன்றி நடித்த நடிப்பு காத்தாயியை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.
மறந்து போன மறைத்துப் போன, தேவைக்கு மட்டும் யாரையும் பயன்படுத்த தவறாத சைவ வேளாளியம் காத்தாயின் மரணத்தை கடும் விமர்சனங்களூடு பிரதி அணுகியது பாராட்டப் படவேண்டியது.
ஆற்றுகையில் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
மாதவி சிவலீலன் –
11.06.2022 சனிக்கிழமையன்று Trinity Centre, East Ham இல் மலையக இலக்கிய மாநாடு ஒருநாள் நிகழ்வாக நடைபெற்றது. அங்கு சிறப்பு நிகழ்ச்சியாக ‘காத்தாயி’ நாடகம் சாம் பிரதீபன், ரஜித்தா சாம் தம்பதியினரால் மேடையேற்றப்பட்டது. இந்நாடகம் பற்றிய விளம்பரங்கள் முன்னதாக வந்த வண்ணமிருந்த போது யார் இந்தக் காத்தாயி என்கின்ற கேள்வி எனக்குள்ளேயிருந்தது. மு. நித்தி சேருடன் உரையாடும் போது அத்தாய் பற்றிய செய்தியைக் கூறியிருந்தார். 1994 ஆம் ஆண்டு மலையகத்தில் தன்னைத் தேடி வந்த போராளி இளைஞனுக்கு அடைக்கலம் கொடுத்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டு வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பத்தொன்பது வருடங்கள் அச்சிறையில் நோய்களோடு இருந்து அங்கேயே மரணித்துப் போனார். அவருக்காக எவருமே குரல் கொடுக்கவும் இல்லை. அச்சம் காரணமாக அவரது புகைப்படங்களையும் உறவினர்கள் எரித்து விட்டனர். இன்று அவரைப் பார்த்தவர்கள் பழகியவர்கள் நினைவிலேயே அவரது உருவம் நினைவு கூரப்படுகின்றது.
மாநாட்டு நிகழ்வுகளின் இடையில் மதிய உணவிற்கு முன்பாக நாடகத்திற்காகப் பார்வையாளர்கள் பசி மறந்து தம்மைத் தயார்ப்படுத்தி அமர்ந்து கொண்டனர். நாடகம் பார்க்கும் குதூகலம் சிரிப்பாகவும் சிறு சிறு உரையாடல்களாகவும் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தது. திடீரென அதட்டலான குரலில் சாமும் சுஜீத்தும் சபையின் சிரிப்பைக் குதூகலத்தை அலட்சியத்தைக் கட்டுப்படுத்தினர், மனம் ஒப்பாத இறுக்கமான இராணுவ சூழலுக்குள் அகப்பட்ட உணர்வைத் தூண்டிச் சபை அடங்கிக் கிடந்தது. கைகளில் கொளுத்திய சாம்பிராணிக்குச்சுகள் திணிக்கப்பட்டன. அன்று அத்தாய்க்கு நடந்த கொடூரத்தைத் தட்டிக் கேட்காத சமூகத்தை முன்னிறுத்தியதாக வாயைக் கட்டிக் கொள்ள கறுப்புத்துணி கொடுக்கப்பட்டது. வாய் மூடிச் சபை மயான அமைதியாகியது.
மெல்லப் படர்ந்த சாம்பிராணிப் புகை மரண நிகழ்வொன்றை உருவாக்கச் சுவாசிக்க முடியாமலும் சிலர் திணறச் சூழல் அபத்தமாகியது. அப்போது காத்தாயி உடல் வெள்ளைத் துணியால் மூடி நால்வரால் கொண்டுவரப்பட் டுக் கிடத்தப்பட்டது. அக்காட்சி மனதைக் குமுற வைக்க, அத்தாயின் கதை பின்னோக்கிய நினைவாகக் காட்சிப்படுத்தப்பட்டது. வதைமுகாமில் அடிகளுக்குள்ளும் வசைகளுக்குள்ளும் திணறும் காத்தாயியாக ரஜித்தா ஈனக்குரல் எடுத்துப் பேசினார். இல்லை, அப்பாத்திரமாகவே மாறித் திணறத் தொடங்கினார். சாம் கொடூர இராணுவ அதிகாரியாக விளங்கிக் கர்ச்சிக்கும் குரல் சபையை அச்சமூட்டியது. இடையிடையே ‘அம்மாவுக்கு ஒன்றும் தெரியாது; அவரை விட்டு விடுங்கள்’ என அத்தாயின் வீட்டில் தங்கிய வரதனின் வாக்குமூலமாக சுஜித் குரல் கொடுத்தார். இராணுவ அட்டூழியத்துக்குள் அவை எடுபடாமல் போயிற்று. கறுத்த உடையில் இருண்ட சூழலைப் பிரதிபலித்த நான்கு சிறுவர்களும் தங்களுடைய பங்களிப்பை அழகாக வழங்கியிருந்தனர்.
ஈழத்து விடுதலைப் போராட்டத்தில் தெரிந்தும் தெரியாமலும் போராளிகளைத் தாய்ப் பாசத்துடன் அரவணைத்த காரணத்தால் வீடுகளிலும் வீதிகளிலும் வதை முகாம்களிலும் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட அனைத்துத் தாய்மார்களின் பிரதிநிதியாகக் காத்தாயித் தாய், அன்று கண்களில் கண்ணீரை வர வைத்தார்.
பாரதிதாசன் ‘எது கலை’ எனும் கவிதையைப் பின்வருமாறு முடிப்பார்.
’’என்நண்பர் பகவதியாம் நடிகர் ஓர்நாள்
எழிலுறும் நாடக அரங்கை அடைந்தார் ஆங்கே
என்நண்பர் அடையாளம் மறந்தேனி ல்லை
இடர்சூழ்ந்தனை நோக்கி அறம் விளக்கும்
சொன்மழையைச் சினங்கூட்டி, மெய்ப்பாடேற்றித்
தொடங்கினார்; விழிப்புற்ற ஏழைத்தோழன்
தனைக் கண்டேன் பகவதியை மறந்தேன்மறக்க
வைத்த தெது? அதுதான் கலையாம் அன்றோ!’’
இக்கவிதை வரியை ரஜித்தா, சாம் நடிப்பில் நான் கண்டேன். அவர்கள் இருவரும் பாத்திரங்களுக்குள் ஒன்றிப் போயினர். சாம், வரதனைத் தெரியுமென ஒத்துக் கொள் என்று ஒவ்வொரு தடவையும் அதட்டும் போதும் அடிக்கும் போதும் ரஜித்தா கெஞ்சுவதும் கலங்குவதும் பதட்டமடைவதும் அழுவதும் ஆதங்கப்படுவதும் நிலைதடுமாறி விழுவதும் ஜீரணிக்க முடியாத துன்பியல் நிகழ்வாக அமைந்தது. உண்மையில் ஒருகணம் அந்த இராணுவ அதிகாரியின் பொல்லைப் பறித்து அவருக்கு விளாச வேண்டுமென என் கால்கள் முன்னோக்கி நகர எத்தனித்தன.
மலையக் மண்ணில் சாதாரணக் குடும்பப் பின்னணியில் வாழ்ந்த அத்தாயிற்காக எவரும் அன்று ஆதரவு கொடுக்கவில்லை. உதவி செய்யவும் இல்லை. யாருமற்ற அனாதையாக உலகில் மறக்கப்பட்ட ஜீவனாக சிறைக்குள் பத்தொன்பது வருடங்கள் வாழ்ந்து புற்று நோயோடும் படுக்கைப் புண்ணோடும் அவதியுற்று மடிந்த அவரின் வாழ்க்கை மறக்கடிக்கப்பட்ட சூழலில் இலண்டனில் அவருக்கு இவர்களால் உயிர் கொடுக்கப்பட்டு அவருக்கு நடந்த அநீதி உலகறியச் செய்யப்பட்டுள்ளது. பேசாப் பொருளைப் பேச வைத்த விம்பம் குழுவினர் வரலாற்றில் நின்று விட்டனர்
நாடகத்தின் நிறைவுப் பகுதியில் சபையே கலங்கி நின்றது. யாவரும் எழுந்து நின்று கரங்களைத் தட்டிக் கலைஞர்களுக்குப் பாராட்டுத் தெரிவித் ததுடன் அத்தாயிற்கும் மரியாதை செலுத்தினர். பலரின் கண்களில் கண்ணீர் ததும்பியது. ஓவியர் ராஜா பெரிதாக அழுதே விட்டார். பின்னணி இசை, உடையலங்காரம், காட்சியமைப்பு யாவுமே உணர்வுபூர்வமாக இருந்து அக்கொடூர சூழலையும் சோகத்தையும் ஏற்படுத்தின.
வலி தரும் படைப்பைத் தரமான படைப்பாகத் தந்த சாம், ரஜித்தா இருவருக்கும் அவர்களோடு தோள் நின்று உழைத்த சுஜித், காண்டீபன், அலன், றித்திக், அனுக்ஷன்,அஞ்சனா, ஷாருகா, றாஜீ, மோதிலா ஆகியோருக்கும் பாராட்டுதல்களும் நன்றியும்.
– பூங்கோதை –
அதே வேளையில் இக்கட்டுரை, இம்மாநாட்டில் அன்று மேடையேறிய மெய்வெளி நாடகக்குழுவின்’காத்தாயி காதை’ பற்றியது மட்டுமே.
காத்தாயி காதை என்ன சொல்லிப் போகிறது, காத்தாயி யார் என்று பார்ப்பது இந்நாடகத்தின் பின்புலத்தை அறிந்து கொள்ள உதவும். இக்காத்தாயியின் இறுதி நாட்கள் பற்றியும் அவருக்கான நீதி கிடைக்காது போன இழி நிலை குறித்தும் இன்னுமே அறியப்படாத இன்னொரு பக்கம் ஒன்று இருக்கலாம் என்பது எனது எண்ணமாக இருப்பினும், மலையக இலக்கிய மாநாட்டின் முதுகெலும்பாக இருந்து, பல அமர்வுகளில், முதலாவது அமர்வான ‘காத்தாயி முத்துசாமி’ அமர்வுக்கும் தலைமை தாங்கிய மு நித்தியானந்தனின் பேச்சிலிருந்து நான் அறிந்து கொண்டவற்றை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.
பதுளை லுணுகளையில், அடாவத்தைத் தோட்டத்தைச் சேர்ந்த காத்தாயி முத்துசாமி என்ற தோட்டத் தொழிலாளிப் பெண் தான் இந்த நாடகத்தின் கதாநாயகி.
1994ம் ஆண்டுவிடுதலை இயக்கப் போராளி ஒருவர் மட்டக்களப்பிலிருந்து பதுளையூடாகத் தப்பிச் சென்ற போது, அவருக்கு தனது லயத்தில் தங்குமிடம்,
உணவு வழங்கியிருந்தார் என்ற குற்றச் சாட்டில் இவர் இலங்கைப் போலீசாரால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வெலிகடைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இனவாத புறக்கணிப்புகளுடன் தன் வாழ் நாளைக் கழித்த காத்தாயி கடுமையான நோயால் பீடிக்கப்பட்டு, இறுதியில் புற்று நோய்க்கும் ஆளாகி படுக்கைப் புண்களுடன் பல இன்னல்களுக்காளாகி இறுதியில் கொழும்பு மருத்துவமனையொன்றில் இறந்தும் போனார். தனது நாற்பத்தியொன்பது வயதில் சிறையில் அடைக்கப்பட்டு, 19 ஆண்டுகள் சிறையிலேயே துன்பங்களுடன் வாழ்ந்து தனது 68 வயதில் தன்னுயிரைத் துறந்தது வலி நிறைந்த சரித்திரம்.
மலையக அரசியல்த் தலைவர்களோ, மனித உரிமை இயங்கங்களோ காத்தாயியைப் பற்றி எந்த அக்கறையும் காட்டவில்லை என்பது துயரத்தின் உச்சம். வடக்கு, கிழக்கு பகுதிகளில் யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியில் அரசினால் விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பின்னரும் காத்தாயி மூன்றரை ஆண்டுகள் சிறை வாசம் செய்தார் என்பது இவரை எவருமே கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், கேட்பார் யாருமற்ற நாதியற்ற பெண்ணாகவே இவர் வாழ்ந்து மறைந்தார் என்பதற்கு அடையாளம். இந்த மாதரசியின் வலிகளை நினைவு கூறும் முகமாக, ஏற்கனவே மேலே குறிப்பிட்டிருந்தபடி ‘மெய்வெளி நாடகக் குழு’ காத்தாயி காதையை மேடை ஏற்றினர்.
சாம் பிரதீபனின் அற்புதமான எழுத்துருவிலும் திறமையான நெறியாள்கையிலும், ரஜித்தா சாம் பிரதீபனின் கச்சிதமான கனதியான காத்தாயி பாத்திரத்திலும் இந்நாடகம் மேடையேறியது. தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்து ரசித்த, ரசித்துக் கொண்டிருக்கும் அனுபவங்கள் எனக்கும் உண்டு என்பதால் இந்நாடகத்தை ஒரு பார்வையாளராக விமர்சிக்கலாம், விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு அறியப்படாத சரித்திரத்தை, காத்தாயி காதையை வந்திருந்த அத்தனை மாந்தர்களின் மனதிலும் ஒரு குறுகிய நேரத்தில் பதிய வைத்த திறமை இந்நாடகக் கலைஞர்களுக்கு உண்டு.
ஒரு ஆசிரியையாக அன்றாடம் பாடசாலையில், ஒரு புதிய கற்பித்தலை ஆரம்பிக்க முன்னர், மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சில உத்திகளைக் கையாள்வது வழமை. அந்த உத்தி தான் ( hook என்று அழைப்போம்) அந்தக் கற்றலை மாணவர்கள் எவ்வளவு ஆழமாக தம் மனதில் பதிய வைப்பார்கள் என்பதைத் தீர்மானிப்பது. அதே போல எவரும் எதிர்பார்க்காத விதத்தில் அத்தனை பார்வையாளர்களையும் சாம் பிரதீபன் தன் பேச்சுத் திறமையால் கட்டிப் போட்டு அல்லது திட்டிப் போட்டு என்றும் அழைக்கலாம், ஒரு பயபக்தியோடு நாடகத்தை ரசிக்க வைக்கத் தொடங்கியதில் ஆரம்பித்தது தான் இந்நாடகத்தின் வெற்றி என்பேன். அவர் நிஜமாகவே எம்மைத் திட்டுகிறாரா அல்லது நாடகத்தின் ஒரு அங்கமா எனப் புரியாமல் பாதி பார்வையாளர்கள் ஸ்தம்பித்துப் போய் மூச்சு விடவே பயந்து போனதில் அரங்கமே ஒரு நொடியில் அமைதியாகியது.
“என்னத்துக்கு இப்ப எல்லாரும் ஃபோனை நோண்டிக் கொண்டிருக்கிறியள்?, எப்ப பார்த்தாலும் ஃ போனை நோண்டிக்கொண்டு, வைச்சிட்டுப் போட்டு எல்லாரும் போய்க் கதிரைகளில இருங்கோ பார்ப்பம்! , இப்ப டீ குடிக்கிறது முக்கியமோ?” என்று அதிரடியாக, சாம் பிரதீபன், அவர் இவர் எனப் பார்க்காமல் சகட்டு மேனிக்கு கண்டவர்களையும் பார்த்துக் கர்ச்சித்ததில், பார்வையாளர்கள் அனைவரும் பறந்து போய் கிடைத்த கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டனர்.
இது நாடகத்தின் ஆரம்பம் எனப் புரியாத, தமிழ் மொழி தெரியாத பெண்ணொருவர், ஆங்கிலத்தில்” இவர் ஆள் கொஞ்சம் கூடச் சரியில்லை, மரியாதை தெரியாத காட்டுமிராண்டியாய் இருப்பார் போல இருக்கு.” என மெல்லப் புறுபுறுத்தது காதில் விழுந்தது.
காத்தாயியாகவே மாறிப் போன, ரஜித்தா பிரதீபனின் நடிப்பினால் பார்வையாளர்கள் மத்தியிலும் காத்தாயியின் வலி சிரமமில்லாது ஊடுருவியது. காத்தாயியின் உடலும் மனமும் சிறை வாசத்தினாலும் சிறைக்காவலர்களின் சித்திரவதையினாலும் துவண்டு போனதையும் அவள் மலையக மாந்தர்களுக்குரிய , ஏழ்மையிலும் சாகாத சக மனித நேயத்தால், தான் உதவி செய்தது ஒரு போராளி எனத் தனக்கு தெரியாதென்பதை ஓயாமல் சொல்லி அழுததையும் எம் கண் முன் கொண்டு வந்த அந்த நடிப்பாற்றல் அலாதியானது.
ஒரு குறுகிய நேரத்தில் தமக்குத் தேவையான அரங்கை, வெறும் நிலத்தில் சிறையாக அமைத்துக் கொண்டதும், நாடகத்தில் ஏனைய பாத்திரங்களில் வந்தவர்களின் நடிப்பும் முக்கியமாக ஒரு போராளியாக வந்தவரின் கச்சிதமான நடிப்பும் காத்தாயி காதைக்கு வலுச் சேர்த்தன. பல இளம் கலைஞர்கள் குறிக்கப்பட்ட நேரக்கணிப்புடன் பின்னணி இசைக்குத் தக்கவாறு தம் அசைவுகளை ஏற்படுத்தியதும், இன்னும் சில மிக இளம் கலைஞர்கள் பின்னணி இசையைத் தகுந்த நேரத்தில் வழங்கியதும் அவர்களது கடுமையான பயிற்சியைக் காட்டியது.
நாடகக் கலை உலகில் பரவலாக அறியப்பட்ட மெய்வெளி நாடகக் கலைஞர்களின் இயக்கத்திலும் நெறியாள்கையிலும் படைக்கப்பட்ட இந்நாடகம் பார்த்தவர்கள் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தது என்றால் மிகையாகாது. மேடையே இல்லாத ஒரு அரங்கில் இவ்வளவு தத்ரூபமாக பார்வையாளர்களை மெய்மறக்கப் பண்ணியவர்கள், நவீன வசதிகள் உள்ள அரங்குகளில் இன்னும் பல மடங்கு இந்நாடகத்தை மெருகேற்றுவார்கள் என்பது சர்வ நிச்சயம்.
குறையாகச் சொல்வதற்கு இக்குறு நாடகத்தில் எதுவும் அகப்படாவிட்டாலும், அவர்கள் தமது கதைப் பின்னணிக்காக பார்வையாளர்களின் கைகளில் கொடுத்த ஊதுபத்தியின் புகை வாசனையும் புகையும் இந்த குழைக்காட்டு இளவரசியின் நாசித்துவாரங்களில் ஒவ்வாமையைத் தூண்டி, ஏற்கனவே உள்ள சுவாசக் காற்றுப் பிரச்னையைத் தூண்டப் பார்த்ததை இங்கு பதிவதால் ,என் போன்ற சுவாசச் சிக்கல் உள்ளவர்கள் எதிர்காலத்தில் தப்பிக்கொள்ளுவார்கள் என நம்புவோம்.
இனி வரும் காலங்களிலும் ‘மெய்வெளி’ தொடர்ந்தும் இப்படியான விழிப்புணர்வுகளைத் தூண்டும் நாடகங்களை மேடையேற்ற வேண்டும் என விழைவதோடு, நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் அள்ளி வழங்குகிறோம்.