காலிமுகத்திடல் பரதநாட்டிய சாதனை நிகழ்வில் பண மோசடி: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் முறைப்பாடு!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

காலிமுகத்திடலில் அண்மையில் நடைபெற்ற 5,000 கலைஞர்களின் பரதநாட்டிய சாதனை நிகழ்வின் பின்னணியில் பெரும் பண மோசடி மற்றும் உழைப்புச் சுரண்டல் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் (FSP) பிரசாரச் செயலாளரும் சமூக செயற்பாட்டாளருமான துமிந்த நாகமுவ ஆகியோர் இணைந்து இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்கள், ஜூன் 14ஆம் திகதி நடைபெற்ற இந்த நிகழ்வு, சாதனை என்ற பெயரில் இலங்கையிலுள்ள ஏழை மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றி நடத்தப்பட்ட ஒரு வணிகச் செயல்பாடு என கடுமையாகச் சாடினர்.
பெருந்தோட்டம் மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் முகப்புத்தகப் பதிவின்படி, அவரது வேண்டுகோள் மற்றும் வழிகாட்டலின் கீழேயே ‘சங்கமம் குளோபல் அகாடமி’ மற்றும் ‘சங்கமளியா ஹாலிடேஸ்’ ஆகிய தனியார் நிறுவனங்கள் இந்நாட்களை ஏற்பாடு செய்துள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டது.
ஒரு அரசு அமைச்சர் சம்பந்தப்பட்ட நிகழ்வில், தனியார் நிறுவனங்கள் மூலம் மாணவர்களிடமிருந்து தலா 4,500 முதல் 6,000 ரூபாய் வரை பணம் வசூலிக்கப்பட்டு, தனியார்களின் பெயர்களில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிகழ்வுக்கு எந்தவொரு அமைச்சோ அல்லது அரசாங்கத் துறையோ நிதி உத்திரவாதத்தையோ அல்லது முறையான கட்டுப்பாட்டையோ வழங்கவில்லை என்றும், இது போன்ற நிகழ்வை இலங்கை கலாச்சார அமைச்சு அல்லது சுற்றுலாத்துறை அமைச்சு மூலம் நடத்தியிருந்தால், அந்த வருமானம் நாட்டுக்குக் கிடைத்து மீண்டும் மக்களுக்கே சென்றிருக்கும் என்றும் தெரிவித்தனர்.
ஆனால், இங்கு தனியாருக்குச் சாதகமாக அமைச்சர் செயல்பட்டுள்ளதாக அவர்கள் சாடினர்.
தற்போது நிகழ்வு முடிவடைந்த பின்னரும், சான்றிதழ்களை வழங்குவதற்காக அந்த நிறுவனங்கள் மேலும் 2,500, 3,000, 12,000 ரூபாய் எனத் தொடர்ந்து பணம் கேட்டு வற்புறுத்தி வருவதாகத் தெரிவித்த அவர்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்த மாணவர்கள் தங்குவதற்கோ, பாதுகாப்பிற்கோ எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்றும், சொந்தச் செலவில் வந்த நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு 25,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இலங்கை மாணவர்களின் உழைப்பையும், கலைத் திறனையும் பயன்படுத்தி இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனமும், ஒரு ஆசிரியையும் சாதனைச் சான்றிதழ் பெறுவதற்காக நம் நாட்டு மக்களின் உழைப்பு சுரண்டப்பட்டுள்ளது மிகவும் பிழையான ஒரு விடயம் என்றும் கவலை வெளியிட்டனர்.
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட செயற்பாட்டாளர்கள், உடனடியாக இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு, மாணவர்கரிடம் வசூலிக்கப்பட்ட பணம் மீண்டும் திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட ராஜாங்க அமைச்சர் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் வலுவாக வலியுறுத்தினர்.


