உயர் நீதிமன்ற வெற்றிடங்கள்: சபாநாயகரிடம் விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் அவசர பிரேரணை!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

உயர் நீதிமன்றத்தில் நிலவி வரும் நீதியரசர் வெற்றிடங்களை நிரப்பாததால் நீதித்துறையில் ஏற்பட்டுள்ள முடக்கம் குறித்து நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் ஒன்றை நடத்துவதற்கான பிரேரணை ஒன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று (26) கையொப்பமிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 83(1) இன் கீழ் இந்த விவாதத்தை நடத்துவதற்கு அனுமதி கோரி, சபாநாயகருக்கு சமர்ப்பிப்பதற்கான பிரேரணைக் கடிதத்திலேயே இவ்வாறு நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தங்களது கையொப்பங்களை இட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றத்தில் எட்டுக்கும் மேற்பட்ட நீதியரசர் பணியிடங்கள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளதாக சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சிகள், இந்த நீண்டகால தாமதத்தினால் நாட்டின் சட்டத்தின் ஆட்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளன.
மேலும், இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக உச்ச நீதிமன்றத்தின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு, மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பொதுமக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான அணுகல் என்பன பெருமளவில் தடைப்பட்டுள்ளதாகவும் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நீதிமன்ற முடக்கநிலை குறித்து நாடாளுமன்றத்திற்கு இருக்கும் வகைகூறல் மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாட்டின் உச்சகட்ட நீதித்துறையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலை குறித்து சபாநாயகர் உடனடியாக நாடாளுமன்ற விவாதத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் தங்களது பிரேரணை மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

