பிரித்தானிய மாகாரணி மீதான அக்கறை நாட்டு மக்கள் மீது ஏன் இல்லை
இலங்கையை அடிமைப்படுத்தி வைத்திருந்த மாகாராணி காலமானதையொட்டி தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்தியுள்ள ஆட்சியாளர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இலங்கையர் 269 பேர் உயிரிழந்த சமயத்தில் தேசிய துக்க தினத்தை அறிவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போராட்டத்தில் சட்டத்தரணிகள் அமைப்பின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதி அளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுவரை அதனை நிறைவேற்றவில்லையென குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டின் ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது நல்ல விடயம். இன்று அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. எனினும் இந்த ஜனாதிபதி பிரதமராக இருந்த காலத்தில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 269 பேர் உயிரிழந்தபோது இந்த வலி அவர்களுக்கு ஏற்படவில்லை. இந்த கவலை, இந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படவில்லை. நாட்டில் சோகத் தினத்தை அறிவிக்க அவர்களுக்குத் தோன்றவில்லை. எனினும் எம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஏகாதிபத்தியவாதிகளின் மாகாராணின் இறுதிக் கிரியை முன்னிட்டு தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்றுரை கதைகள் மாத்திரமே. ஸ்கொட்லாந்து பொலிஸாரிடம் அறிவிப்பதாக தெரிவித்தார்கள். மீண்டும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டார்கள். எனினும் விசில் மாத்திரமே பல்டியை காணவில்லை. வெளிநாட்டில் உள்ள பாட்டிக்காக சோகத் தினத்தை பிரகடனப்படுத்தியமை பரவாயில்லை. எனினும் இந்த நாட்டிற்குள், இந்த நாட்டு மக்கள் இரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்தமையை நினைவுகூர பெரிய மனது வேண்டும். ஆகவே உயிர்த்த ஞாயிறு தாக்குலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வழங்குங்கள். என்றார்.
மேலும் காலம் தாழ்த்தாது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள போராட்டத்தில் சட்டத்தரணிகள் அமைப்பின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார இலங்கை மக்கள் குறித்த உண்மையான அக்கறை ஆட்சியாளர்களுக்கு காணப்படுமாயின் இதனை நிறைவேற்றுமாறும் வலியுறுத்தியுள்ளார்.