அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தால் மின்சக்தித் துறை மற்றும் பொருளாதாரம் பாரிய நெருக்கடியில்: சுஜீவ சேனசிங்க எச்சரிக்கை

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதான காரியாலயத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ள போதிலும், அரசாங்கத்தின் அமைச்சர்களுடைய வங்கி கணக்குகள் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தினார். கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும் 30 சதவீதத்தை மாத்திரமே அரசாங்கம் செலவிட்டுள்ளமையானது, இந்த அரசாங்கத்தின் இயலாமையையே காட்டுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நாட்டில் நிலவும் நிலக்கரி மோசடி காரணமாக எரிசக்தி துறையில் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்துவதால் நுரைச்சோலை மின்நிலையத்தின் மின் உற்பத்தி திறன் குறைந்துள்ளதோடு, உரிய நேரத்தில் நிலக்கரியைக் கொண்டுவரத் தவறியதால் இந்த ஆண்டு மின் உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் எனத் தெரிவித்தார். இதனால் மீதமுள்ள தேவையை நிவர்த்தி செய்ய அதிக செலவுமிக்க டீசல் மின்சாரத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீர் மின்சாரத்திற்கு ஒரு அலகிற்கு 3 ரூபாயும், நிலக்கரிக்கு 23 ரூபாயும் செலவாகும் நிலையில், டீசல் மூலம் மின்சாரம் தயாரிக்க 80 ரூபாய் வரை செலவிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நட்டத்தின் பின்னணியிலும் டீசல் இறக்குமதியில் பாரிய ஊழல்கள் இடம்பெறுவதாகவும், உலகிலேயே டீசலுக்காக அதிக விலையை இலங்கை செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 390 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளை கடந்த நான்கு மாதங்களாக வழங்காது, அந்த நிதியை டீசல் கொள்வனவுக்குப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளமையானது அரசாங்கத்தின் திவால் நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அவர் விமர்சித்தார்.

அத்துடன், இந்தியாவுடன் இரகசியமான முறையில் 7 உடன்படிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும், இதன் மூலம் இலங்கையின் முக்கிய தரவுகளைப் பகிர முற்படுவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும் அவர் எச்சரித்தார். அரசாங்கத்துடன் நெருக்கமான வர்த்தகர்களின் நலன்களுக்காகவே இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக அவர் மேலும் குற்றஞ்சாட்டினார்.
அரசாங்கத்தின் இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளால் நாடு மீண்டும் ஒருமுறை வங்குரோத்து நிலையை நோக்கித் தள்ளப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளில் இருந்து விடுபடுவதற்கான வழிகளை அரசாங்கம் கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இறுதியில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையின் கீழ் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய சுஜீவ சேனசிங்க, நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய அனுபவம் வாய்ந்த திறமையான குழுவினர் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளதாகவும், மக்கள் நலனுக்காகப் பணியாற்றத் தாங்கள் எப்போதும் தயாராக இருப்பதாகவும் தனது உரையில் குறிப்பிட்டார்.