நோய்களால் அவதியுற்ற திரைக் கலைஞர் கருணைக் கொலை!
Kumarathasan Karthigesu
1950 களில் பிரெஞ்சு சினிமாவில் அடிப்படை மாற்றத்தை உருவாக்க வழிகோலிய “பிரெஞ்சுப் புதிய அலை” (French: La Nouvelle Vague) என்ற சினிமாக் கலைத்துறை இயக்கத்தின் தந்தை என வர்ணிக்கப்படுபவரான தயாரிப்பாளர் ஜீன்-லூக் கோடார்ட் (Jean-Luc Godard) தனது 91 ஆவது வயதில் காலமானார்.
அவரது மரணம் மருத்துவ உதவியுடனான தற்கொலை – அல்லது கருணைக் கொலை என்ற தகவலை அவரது குடும்பத்தின் சட்ட ஆலோசகர் வெளியிட்டிருக்கிறார்.
பல்வேறு செயலிழப்பு நோய்க் குறிகளால் நீண்ட காலம் அவதிப்பட்ட அவர் சுவிற்சர்லாந்தில் தனது வாழ்வை மருத்துவ அனுமதியுடன் நிறைவு செய்து கொண்டார் (assisted suicide) என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சுவிற்சர்லாந்தில் கருணைக் கொலை,(euthanasia) மருத்துவ உதவியுடனான தற்கொலை (assisted suicide) என்பன சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரான்ஸில் அவற்றுக்கு அனுமதி இல்லை. கருணைக் கொலை மற்றும் மருத்துவ உதவியுடனான தற்கொலை போன்றவற்றை அனுமதிப்பதற்காக சட்டங்களில் திருத்தம் கொண்டுவருவதற்கு மக்ரோன் அரசு தீர்மானித்துள்ளது.
மிக நீண்ட காலமாக விவாதத்துக்குரிய விடயமாக இருந்துவருகின்ற இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த மாதம் குடிமக்கள் மாநாடு (convention citoyenne) மூலம் மக்கள் கருத்து அறியப்படும் என்று அதிபர் மக்ரோன் அறிவித்திருக்கிறார்.
இந்தக் கட்டத்தில் தயாரிப்பாளர் ஜீன்-லூக் கோடார்டின் மரணம் வாழ்வை நிறைவு செய்யும் உரிமை தொடர்பான (end-of-life) சட்டங்கள் மீது மீண்டும் நாட்டின் கவனத்தைத் திருப்பியிருக்கிறது.