பிரமாண்டமான மரணச்சடங்கு!தலைவர்கள் உட்பட உலகப் பிரமுகர்கள் 500 பேர் லண்டனுக்கு!!

Kumarathasan Karthigesu

?தனிப்பட்ட விமானங்கள் ஹெலிகளில் வரத் தடை!!

?வாகன அணிகள் இல்லை தலைவர்களுக்கு பஸ் வசதி!

?லண்டன் பயண முன்பதிவு அதிகரிப்பு! கட்டணம் உயர்வு!!

?உக்ரைன் அதிபர் வரக்கூடும் புடின் கலந்துகொள்ளமாட்டார்!

“இறுதிச் சடங்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் இடவசதிகுறைவாக இருப்பதால், வெளிநாட்டு அரசுத் தலைவர்களின் குடும்பத்தினர், பணியாளர்கள் அல்லது பரிவாரங்களைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதற்காக வருந்துகிறோம்… “

இவ்வாறு கேட்டுக் கொள்ளும் செய்தி ஒன்று உலகெங்கும் உள்ள பிரிட்டிஷ் தூதரகங்களூடாக வெளிநாடுகளுக்கு விடுக்கப்பட்டிருக்கிறது.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள எலிசபெத் மகாராணியின் இறுதி நிகழ்வு கடந்த பல தசாப் தங்களுக்குப் பின்னர் பிரிட்டனில் நிகழவிருக்கின்ற  பிரமாண்டமான மரணச் சடங்கு என்று வர்ணிக்கப்படுகிறது. 57 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சேர் வின்ஸ்டன் சேர்ச்சிலின் (Sir Winston Churchill) இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர், பாதுகாப்பு, இடவசதி, போக்குவரத்து மற்றும் ராஜதந்திர நெறிமுறைகளில் சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்கின்ற முதலாவது அரசு மரியாதைகளுடனான இறுதிச் சடங்கு இதுவாகும் என்று குறிப்பிடப்படுகிறது.

முக்கிய வல்லரசுகளினதும் பிரித்தானியக் குடியேற்ற (காலனி) நாடுகளினதும் அரசுத் தலைவர்கள், பிரதமர்கள், மற்றும் முடியாட்சி செல்வாக்குள்ள நாடுகளது மன்னர்கள், இளவரசர்கள், ராணிகள் உட்பட அரச குடும்பத்தவர்கள் என்று சுமார் 500 அதிவிசேட பிரதிநிதிகள் லண்டனுக்கு வரவிருக்கின்றனர்.

ஜோ பைடன், மக்ரோன், கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, நியூசிலாந்து பிரதமர் ஜெசின்தா ஆர்டெர்ன்(Jacinda Ardern) ஸ்பெயின் அரசர் ஃபெலிப், ஜப்பானியப் பேரரசர் நருஹிட்டோ (Emperor Naruhito), ஆஸ்திரேலிய பிரதமர் அன்ரனி அல்பனெஸ் (Anthony Albanese), ஜேர்மனிய அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் (Frank-Walter Steinmeier) ஆகியோரது வருகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குடியேற்ற நாடுகளில் இருந்து பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹஸீனா (Sheikh Hasina) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் வருகின்றனர். இந்தியப் பிரதமர், சீன அதிபர் ஆகியோர் வருகை தருவார்களா என்பதை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயின் இரண்டாயிரம் ஆசனங்களும் வெளிநாட்டுப் பிரமுகர்கள் உட்பட அரசுத் தலைவர்கள் ஒவ்வொருவ ருக்கும் ஒதுக்கப்படவுள்ளன. ஒரு நாட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆசனங்கள் மட்டுமே பங்கிடப்படும். அரசுத் தலைவர்கள் அவர்களது ஒரு சகா அல்லது துணைவி, துணைவர் என இரண்டு பேருக்கே இடம் கிடைக்கும். பெரும் ஆளணி இன்றி வருகை தருமாறு அமெரிக்க அதிபர் பைடனிடம் அரச குடும்பத்தின் சார்பில் கோரப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன் விமான நிலையங்களில் ஏற்படக் கூடிய பெரும் நெருக்கடிகளைக் கவனத்தில் கொண்டு தனிப்பட்ட ஜெற் விமானங்கள், ஹெலிக்கொப்ரர்களில் வருகை தருவதைத் தவிர்த்து வழக்கமான வர்த்தக சேவை விமானங்களில் வருமாறு அரசுத் தலைவர்களிடம் கோரப்பட்டுள்ளது.

தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் தங்கள் தங்கள் சொந்த வாகனங்களில் அணியாக இறுதி நிகழ்வு நடைபெறும் பகுதிக்குள் செல்ல முடியாது. அவர்களது வாகனங்கள் மேற்கு லண்டனில் நிறுத்தப்படும். அவர்கள் அனைவரும் வரவேற்பு மண்டபம் ஒன்றில் இருந்து பஸ்கள் மூலம் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

அமெரிக்க அதிபரும் அவரது சொந்த வாகன அணியைத் தவிர்த்து ஏனைய தலைவர்களுடன் ஒன்றாக பஸ் மூலமே பயணிக்க வேண்டியிருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்த உலகத் தலைவர்களும் இறுதி நிகழ்வுக்கு வருகைதருகின்ற போதிலும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் கலந்துகொள்ளமாட்டார் என்று  தெரிவிக்கப்படுகிறது. ரஷ்ய அதிபரையோ அல்லது நாட்டின் சார்பில் பிரதிநிதிகள் எவரையுமோ  அழைப்பதில்லை என்று பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.

உக்ரைன் அதிபர் ஷெலான்ஸ்க இறுதிச் சடங்கில் எதிர்பாராத விதமாகத் திடீரென வந்து கலந்துகொள்ளக் கூடும் என்று எதிரபார்க்கப்படுகிறது. பெலாரஸ், மியன்மார் நாடுகளுக்கும் அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை.

இதேவேளை, மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரான்ஸிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இருந்தும் பெரும் எண்ணிக்கையானோர் லண்டன் செல்வதற்குப் ஆயத்தமாகி வருவதால் வார இறுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில், பஸ், விமானப் பயணப் பதிவுகள் திடீரென அதிகரிததுள்ளன. கட்டணங்களும் உயர்ந்துள்ளன. லண்டனுக்கான எயார் பிரான்ஸின் விமானக் கட்டணம் 600 ஈரோக்கள் வரை அதிகரித்துள்ளது.