அரச பயங்கரவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் – சுதேஷ் நந்திமால்
அமைதிப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ஒடுக்கும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டுமென தென்னிலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமால், ஜனநாயக போராட்டக்காரர்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று மக்கள் ஆணைக்கு அப்பால் சென்று அரச பயங்கரவாதம் செயற்படுகின்றது. இராணுவத்தை பயன்படுத்தி தடிகளை எடுத்துக்கொண்டு, மக்களின் அமைதியான ஆர்ப்பாட்டத்தை, மக்களின் ஜனநாயக உரிமையை இராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்துகின்றார்கள். ஆகவே யார் இந்த நாட்டில் தீவிரவாதி? ஊழலுடனான இந்த ஆட்சிக்கு எதிரான இளைஞர் யுவதிகளா? இல்லாவிடின் ரணில் விக்ரமசிங்க, மொட்டுக் கட்சி இணைந்த இந்த அரசாங்கமா? இதனை மக்கள் புரிந்துகொள்ள முடியுமா? ரணில் விக்ரமசிங்க பல கனவுகளை இந்த மக்களுக்கு வழங்குகின்றார் எனினும் அதில் ஒன்றுமே பலிக்காது. அனைத்து பொய்யான வாக்குறுதிகளையும் வழங்கி, தமது ஜனாதிபதி ஆசனத்தை காப்பாற்றி மீண்டும் ராஜபக்சவின் புதல்வருக்கு இந்த பதவியை வழங்கும் நோக்கத்தை நோக்கி அவர் பயணிக்கின்றார். பொறுத்தது போதும் மேலும் தாமப்படுத்த வேண்டாம். என்றார்.
ஜனநாயக ரீதியில் போராடும் மக்கள் மீது ஆயுதப் படைகளை கொண்டு தாக்குதல் நடத்தும் அரசாங்கமும், அதிகாரிகளுமே பயங்கரவாதிகள் என கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமால் மேலும் தெரிவித்துள்ளார்.