ஐ. நா. மனித உரிமை ஆணையாளராக ஒஸ்ரியா நாட்டு ராஜதந்திரி.
Kumarathasan Karthigesu
ஒஸ்ரியா நாட்டின் மூத்த ராஜதந்திரி வோல்கர் ராக் (Volker Türk) மனித உரிமைகளுக்கான ஐ. நா.ஆணையாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரது தெரிவைப் பொதுச் சபை ஏற்றுக் கொண்டுள்ளது. அவர் மிக நீண்ட காலம் ஐ. நா. அமைப்புகளில் பணி புரிந்த மூத்த அதிகாரி ஆவார் . தற்போதைய செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸுக்கு மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கிவந்தவர். அவருக்கு மிக நெருக்கமான ஓர் அலுவலர்.
மனித உரிமைகள் ஆணையாளராக விளங்கிய மிச்செல் பாச்லெட் (Michelle Bachelet) அம்மையாரின் பதவிக்காலம் கடந்த மாத இறுதியுடன் முடிவடைந்தது. அவரது இடத்துக்கே வோல்கர் ராக் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மலேசியா, குவைத், கொசோவோ, பொஸ்னியா – ஹர்சகோவினா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு போன்ற நாடுகளில் அகதிகளுக்கான ஐ. நா. தூதரகங்களில் பணியாற்றிய வோல்கர், அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களது உரிமைகள் விடயத்தில் தீவிர கரிசனையும் அனுபவமும் மிகுந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1993 இல் ஆரம்பிக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணையாளர் (human rights high commissioner) பதவியில் எட்டாவது ஆணையாளராக வோல்கர் நியமனம் பெற்றுள்ளார். இந்தப் பதவிக்கு ஆசியா, ஆபிரிக்கா நாடுகளைச் சேர்ந்த பலரது பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்தன. அர்ஜென்டினாவைச் சேர்ந்த ராஜதந்திரி ஃபெடரிகோ வில்லேகாஸ் (Federico Villegas) மற்றும் செனகல் நாட்டைச் சேர்ந்த அடாமா டியெங் (Adama Dieng) ஆகியோர் முக்கியமானவர்கள்.
அதேசமயம் வோல்கரின் தெரிவு ஐ. நா. செயலாளர் நாயகத்தின் தனிப்பட்ட செல்வாக்கினால் செய்யப்பட்ட ஒன்று என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.