நேற்று லண்டன் ஹெயிஸ்(Hayes) இல் ஆரம்பமானது மெய்வெளி நாடகப் பயிலகம்.
தொடர்ச்சியான நாடகப் பயிலரங்குகளுக்கூடாக லண்டன் வாழ் சிறுவர்கள் இளையோரின் ஆளுமை விருத்திக்கு பணியாற்றி வரும் மெய்வெளி நாடகப் பயிலகத்தின் புதிய பிரிவு நேற்றைய தினம் லண்டன் Hayes இல் ஆரம்பமாகியிருந்தது.
நாடக மற்றும் ஊடகத் துறைகளில் 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றி அத் துறைகள் சார்ந்து நிபுணத்துவம் கொண்ட மெய்வெளியின் இயக்குனர்கள் சாம் பிரதீபன் மற்றும் றஜித்தா சாம் பிரதீபன் ஆகியோரின் வளப்படுத்தலில் நேற்றைய தினம் பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகியிருந்தன.
நியூமோல்டன்(New Malden) ஹறோ(Harrow) மற்றும் சவுத்என்ட்ஒன்சீ(Southend on Sea)போன்ற பிரித்தானியப் பிரதேசங்களில் தமது பிராந்தியப் பயிலகங்களை அடுத்தடுத்த மாதங்களில் ஆரம்பிக்கவிருக்கும் மெய்வெளி அரங்கப் பயிலகம் கொவிட் கால முடக்க நிலைக்கு பின்னர் நேற்று மீண்டும் தமது செயற்பாடுகளை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளார்கள்.
நேற்றைய தினம் ஆரம்பமாகிய முதல் நாள் பயிற்சி வகுப்புகளில் பயிற்சியாளர்களுடன் அவர்களின் பெற்றோரும் இணைந்து கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் மிக உற்சாகமாக பிள்ளைகளும் பெற்றோர்களும் பயிற்சிகளில் கலந்துகொண்டிருந்மையையும் காணக்கூடியதாக இருந்தது.
நாடகத்தை வெறும் நாடகத்துக்காக என்றல்லாமல் குழந்தைகள் மற்றும் இளையோரின் மொழியாற்றல் ஆளுமை விருத்தி போன்றவற்றை மேம்படுத்தும் கருவியாக கையாண்டு வரும் மெய்வெளி அரங்க குழுவினர் 2020ம் ஆண்டில் லண்டனில் மிகப்பெரியதொரு இளையோரின் நாடக விழா ஒன்றினைத் திட்டமிட்டிருந்ததும் நீண்ட காலப் பயிற்சிகளின் பின்னர் நேர்த்தியான பல அரங்க அளிக்கைகளை நிகழ்த்தவிருந்தமையும் கொவிட் கால முடக்க நிலை காரணமாக அந்த அரங்கியல் விழா நடைபெறமுடியாமல் போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மெய்வெளி நாடகப் பயிலக தோற்றுவிப்பாளர்களாயும் அதன் இயக்குனர்களுமாயும் விளங்கும் சாம் பிரதீபன் மற்றும் றஜித்தா சாம் பிரதீபன் போன்றோர் 2020 முதல் மெய்வெளித் தொலைக்காட்சி ஒன்றை இயக்கி வருவதும் சமூக கலை இலக்கிய ஆன்மீக சமூக அரசியல் போன்ற பல விடயங்களையும் தமது ஊடகங்களினுடாக உலகம் முழுவதும் கொண்டு சேர்த்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.