நாடாளுமன்றத்தில் அனைவரும் கொள்ளையர்கள், வீட்டுக்கு அனுப்புவோம்’ அருட்தந்தை சத்திவேல்
தற்போதைய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி பொது சொத்துக்களை கொள்ளையடிப்பதாக தென்னிலங்கையின் சிவில் சமூக செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுவதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளருமான அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தென்னிலங்கை மக்களுடன் இணைந்து, பொது அமைப்பினை உருவாக்கி தற்போதைய நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்பும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் இன்று கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் இந்த முறைமையை மாற்றுமாரு கோரிக்கை விடுக்கின்றோம். முறைமை மாற்றம் எனப்படுவது வடக்கு, கிழக்கு மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் மாற்றம் வரவேண்டும். அரசியல் யாப்பில் மாற்றம் வரவேண்டும். இதற்கு நாங்கள் மக்களை தயார்படுத்துவோம். இதற்கென மக்களை தெளிவுபடுத்தி அரசியல் ரீதியாக சிந்திக்கக்கூடிய அமைப்பு ஒன்றை நாம் கட்டியெழுப்புவோம். அந்த மக்கள் அமைப்புடனேயே நாம் முன்னோக்கிச் செல்வோம். அவர்களுடன் இணைந்து இவர்களை எவ்வாறு விரட்டியடிப்பது என்பது தொடர்பில் நாம் செயற்பாடுகளை முன்னெடுப்போம். இன்று நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய அனைத்து உறுப்பினர்களும் பொது மக்களின் சொத்தை கொள்ளையடித்தவர்கள். இந்த கொள்ளை ஆட்சியாளர்களை எவ்வாறு விரட்டுவது என்பது தொடர்பில் ஜனநாயக ரீதியிலான தீர்மானத்தை மேற்கொள்வோம். அந்த ஜனநாயகத்தை இவர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். இந்த ஜனநாயகத்தின் அடிப்பைடையிலேயே இவர்கள் கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர். ஆகவே நாங்கள் மதிக்கின்ற ஜனநாயகம் வேறு, அவர்கள் நினைக்கும் ஜனநாயகம் வேறு. எனினும் எங்களது ஜனநாயகம் மக்கள் சக்தியின் ஊடாக தேசத்துரோக ஆட்சியாளர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை அடுத்த தேர்தலில் இவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கான அமைப்பு உருவாக்கத்தை வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தென்னிலங்கை மக்களுடன் இணைந்து உருவாக்குவோம். என்றார்.
ஒருசில ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்துவிட்டு போராட்டத் தலைமைகளை கட்டுப்படுத்திவிட்டதாகத் அரசாங்கம் நினைத்துவிட்டதாகவும் எனினும் போராட்டத்திற்கான தலைமை கொள்கையை அடிப்படையாக் கொண்டது எனவும் கொள்கைகளைகக் ஏற்றுக்கொண்டுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் வெளியில் இருப்பதாகவும் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் மேலும் தெரிவித்துள்ளார்.