பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இடையே மோதல்.
ஆசிய கோப்பை டி20 தொடரில் நேற்று சார்ஜாவில் நடந்த சூப்பர் 4 சுற்றில் கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றிபெற்றது. இந்த வெற்றி மூலம் ஆசியகோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் நுழைந்தது.
அதேபோல், இலங்கை அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இப்போட்டியில் தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்ததால் அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.
போட்டி நடந்த மைதானத்தில் இருந்த இருக்கைகளை வீசி எறிந்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். மேலும், போட்டியை காண வந்திருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் மீதும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது மைதானத்தில் இருந்த இருக்கைகளை ஒருவர் மீது ஒருவர் தூக்கி வீசினர்.
பின்னர், மைதானத்தில் இருந்து வெளியே வந்த இருநாட்டு ரசிகர்களுக்கு இடையே வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது. இதனால், சார்ஜா மைதானம் அருகே பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. பின்னர், அங்கு வந்த போலீசார் இரு நாட்டு ரசிகர்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். போட்டியின் போது ஏற்பட்ட வெற்றி – தோல்வியால் இருநாட்டு ரசிகர்களும் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.