ஆசிய கோப்பை: இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த இந்தியா

ஆசிய கோப்பை டி20 தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்தன. ஒவ்வொரு அணியும் சக அணியுடன் தலா ஒருமுறை மோதும் அதில் வெற்றிபெற்று பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

ஆனால், சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியுடம் தோல்வியடைந்தது. இதன் மூலம் ஆசிய கோப்பை இறுதிபோட்டிக்கு செல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு மங்கியது. அதேவேளை, பாகிஸ்தான் அணி எஞ்சிய இரு ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கையிடம் தோற்க வேண்டும்.

இந்திய அணி தனது கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். இப்படி எல்லாம் சரியாக நடந்தால் இலங்கை 3 வெற்றியுடன் கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் தலா ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி தேர்வாகும்.

இதில் இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூப்பர் 4 சுற்றில் இன்று நடந்த 4-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான் எதிர்கொண்டது. பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றிபெற்றது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்ததன் மூலம் இலங்கை அணியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதேவேளை, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றதை தொடர்ந்து இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இந்தியா இழந்தது. இந்தியா சூப்பர் 4 சுற்றில்  ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த இந்தியா , ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று  மோதுகின்றன.