கனடா கத்தி வெட்டு : தேடப்பட்டுவந்த முக்கிய கொலையாளி கைதின் பின் மரணம்!
Kumarathasan Karthigesu
கனடாவின் சஸ்காட்ச்செவன் (Saskatchewan மாகாணத்தில் தொடராகப் பலரைக் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த சகோதரர்களில் இரண்டாவது நபரும் உயிரிழந்துவிட்டார்.
31 வயதான மைலிஸ் சண்டர்சன் (Myles Sanderson) என்பவரே கைதுசெய்யப்பட்ட பிறகு மருத்துவ சிகிச்சையின் போது உயிரிழந்தார் என்று கனடா பொலிஸ் தெரிவித்திருக்கிறது. அவர் எத்தகைய
சூழ்நிலையில் மரணமானார் என்பது பற்றிய மேலதிக விவரங்களைப் பொலீஸார் உடனடியாக வெளியிடவில்லை. ரொஸ்தேர்ன் (Rosthern)என்ற நகரில் அவரைக் கைது செய்த சமயத்தில் கடத்தப்பட்ட வெள்ளை நிற வாகனம் ஒன்றில் காணப்பட்டார் என்றும் சுயமாக ஏற்படுத்திய காயங்கள் காரணமாகவே அவர் உயிரிழக்க நேரிட்டது என்றும் பொலீஸ் வட்டாரங்களை ஆதாரம் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
கொலையாளி தனது தாயாரின் வீட்டில் இருந்து அவரது வாகனத்தை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்ற வேளையிலேயே பொலீஸார் அவரைத் துரத்திப் பிடித்துள்ளனர் என்று ஒரு தகவல் தெரிவித்தது.
தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியாகிய மைலிஸ் சண்டர்சன் கடந்த இருபது ஆண்டுகளில் 59 குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.
மைலிஸ் சண்டர்சனின் சகோதரராகிய டார்மியன் சண்டர்சன்(வயது 30) கடந்த திங்களன்று தாக்குதல்கள் நடைபெற்ற இடத்துக்கு அருகே பற்றைக் காடு ஒன்றில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.
கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருந்த இரண்டாவது சகோதரரைப் பிடிப்பதற்காக கடந்த நான்கு தினங்களாக நாட்டின் மூன்று மாகாணங்களை உள்ளடக்கிய பெரும் பிரதேசத்தில் மிகத் தீவிரமான பொலீஸ் தேடுதல்கள் நடத்தப்பட்டு வந்தன.
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அறியப்படுகின்ற இவ்விரு சகோதரர்களும் சேர்ந்து கனடாவின் பூர்வீக குடிகள் வசிக்கும் கிராமங்களில் தொடர்ச்சியாகப் பல இடங்களில் பத்துப் பேரை வெட்டிக் கொன்றும் 18 பேரைக் காயப்படுத்தியும் புரிந்த கொடூரத் தாக்குதல்கள் கனடா முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தன.
கனடா உட்பட உலகின் பல பகுதிகளில் கத்தியால் தாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் அதிக எண்ணிக்கையான பொது மக்கள் கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்ட முதலாவது பெரிய தாக்குதல் சம்பவம் இதுவே ஆகும்.