அமைதி ஆர்ப்பாட்டத்தில் வன்முறையை புகுத்திய முன்னிலை சோஷலிசக் கட்சி, ஜனாதிபதி குற்றச்சாட்டு
- வீடியோ இணைப்பு -
ஆட்சிக்கு வந்ததில் இருந்து செயற்பாட்டாளர்களுக்கு எதிராக தொடர்ந்து அடக்குமுறைகளை முன்னெடுத்த ஜனாதிபதி, தற்போது அரசாங்கத்திற்கு எதிரான கட்சியொன்றை இலக்கு வைப்பதன் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு, முன்னிலை சோசலிசக் கட்சி வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த கட்சியின் தாய்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியை பெரும் அச்சத்துடன் அழித்த அரசாங்கத்தில் அதிகாரமிக்க அமைச்சுப் பதவியை வகித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் எவ்வித ஆதாரமும் முன்வைக்கப்படாமல் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொள்கை ரீதியிலான அரசியலை, நவீன அரசியலை பொது மக்கள் எதிர்பார்த்தனர் எனினும் நாம் எவரும் அதனை பின்பற்றவில்லை. இறுதியில் அழுத்தம் அதிகரித்தமையால் இளைஞர் யுவதிகள் ஏப்ரல் மாதம் போராட்டத்தை ஆரம்பித்தனர். அது அமைதியான ஆர்ப்பாட்டம். அவர்கள் தமது திறன்களை வெளிப்படுத்தினர். அவர்களது இயலுமையை வெளிப்படுத்தினர். அவர்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். இதற்கு நாம் இணங்கினாலும், இணங்காவிடினும் அதனை நாம் மதித்தோம். முதன் முறையாக இளைஞர்கள் ஆயுதம் ஏந்தாமல், குண்டுகளை கையில் எடுக்காமல் நாட்டில் மாற்றம் ஒன்று அவசியம் எனத் தெரிவித்னர். அவ்வாறு நல்லெண்ணத்துடன் தொடர்ந்து பயணிப்பது கஷ்டம். அதற்குள் விசேடமாக முன்னிலை சோஷலிசக் கட்சி வன்முறையுடன் முன்னோக்கி வந்தனர். இறுதியில் இளைஞர் யுவதிகள் வெளியேறினர். வன்முறை ஆட்சி செய்தது. ஜுலி 9 முதல் 13 வரை நாட்டின் ஆட்சியை நிறுத்தி நாடாளுமன்றத்தை கைப்பற்ற முனைந்தனர். இது தோல்வியில் முடிந்தவுடன் அதனுடன் இணைந்து போராட்டமும் நிறைவுக்கு வந்தது. போராட்டம் நிறைவடைந்தாலும், அந்த இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்பு நிறைவடையவில்லை அது முன்னோக்கிச் செல்லும். என்றார்
1980களின் பிற்பகுதியில் ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் உருவாக்கப்பட்ட தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கத்தின் பயணத் தோழராக இருந்த மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் பிரதமருமான தினேஷ் குணவர்தனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் அதிதியாக ஜனாதிபதிக்கு அருகில் அமர்ந்திருந்தார்.