கோதுமை மா விற்பனை, வடக்கிலும் தெற்கிலும் இருவேறு சட்டங்கள்
- வீடியோ இணைப்பு -
கோதுமை மா தொடர்பில் இலங்கையின் வடக்கிற்கிலும் தெற்கிலும் இருவேறு சட்டங்கள் செயற்படுவதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தென்னிலங்கை அமைப்பு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ்ப்பாணத்தைவிட கொழும்பில் அதிக விலைக்கு கோதுமை மா விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த கறுப்பு சந்தை வர்த்தகத்தை இல்லாதொழிக்க வேண்டுமெனவும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கோது மா கருப்புச் சந்தை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் துரித விலை அதிகரிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்துவது குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரை இன்று சந்தித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் இரண்டு சட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. கொழும்பில் கருப்புப் சந்தை மாபியா காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் இந்த மாபியா இல்லை. யாழில் 50 கிலோகிராம் மாவின் விலை 12,000 ரூபாய் எனினும் கொழும்பில் 20 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது. கொழும்பிற்கு ஒரு சட்டம் யாழ்ப்பாணத்திற்கு ஒரு சட்டம். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. யாழ்ப்பாணத்தில் ஒரு பாணின் விலை 140 அல்லது 180 கொழும்பில் பாணின் விலை 280 அல்லது 300ஆக காணப்படுகின்றது. நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது. இந்த மாபியாக்களை நிறுத்த வேண்டும். என்றார்.
பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் அத்தியாவசிய பொருட்களின் துரித விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.