விசா நடைமுறை குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்.

வௌிநாட்டவர்கள் இந்நாட்டுக்கு வரும் போது 30 நாட்களுக்கான விசாவுக்காக ஒருவரிடம் அறவிடப்பட்ட 50 டொலர்கள் என்ற பழைய கட்டணத்தை தொடர்ந்தும் பராமரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை அதேபோல் நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மேலும், வெளிநாட்டவர் நாட்டிற்குள் நுழையும் போது அதற்கான விசாவை வழங்குவதற்கான முழுப் பொறுப்பையும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஏற்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, On Arrival விசா வசதி தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்துகிறார்.

இதில் உரையாற்றிய அமைச்சர், “புதிய விசா முறை தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி நவம்பர் 23ஆம் திகதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. விசா கட்டண விவகாரமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களின் ஒரு பகுதியாகும். ஆனால் அது நவம்பரில் நிறைவேற்றப்பட்டது. ETA அல்லது மின்னணு பயண ஒப்புதல் முறை மூலம் மாற்றத்தை செயல்படுத்த முடியாது.

எனவே VFS அமைப்பு மூலம் அதை செய்ய நாங்கள் ஏப்ரல் 17 வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ETA அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக இந்த முறையை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டோம். VFS என்றால் என்ன என்று வெளிநாடு செல்லும் அனைவருக்கும் தெரியும். 151 நாடுகளில் 67 அரசாங்கங்களால் சுமார் 3,300 மையங்களில் பயன்படுத்தப்படும் முறை இது” என்றார்.