மத்திய தரைக்கடல் பகுதிகளில் கப்பல்களைக் குறிவைத்து தாக்கும்  ஹவுதி படை

காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடரும் நிலையில், யெமனில் உள்ள ஹவுதி படை மத்திய தரைக்கடல் பகுதிகளில் பயணிக்கும் அனைத்து வகையான வணிக கப்பல்களைக் குறிவைத்தும் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

செங்கடலில் ஏவுகணைகள் மூலம் பிரிட்டிஷ் எண்ணெய்க் கப்பலான ஆந்த்ரோமெடா ஸ்டார் மீது தாக்குதல் நடத்தியது நாங்கள் தான்’  ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி அந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளார்.

யெமன் செய்தி தொடர்பாளர் யாஹ்யா சாரி மேலும் கூறுகையில், ‘எங்கள் வான்வெளியில் சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்க ராணுவத்தின் எம் கியு-9 ரீப்பர் ட்ரோனையும் நாங்கள் சுட்டு வீழ்த்தி இருக்கிறோம்’ என்றார். இந்த சம்பவம் குறித்து அமெரிக்க இராணுவம் இதுவரை எந்தவொரு கருத்தையும் கூறவில்லை இருப்பினும், ஏமனில் அமெரிக்காவின் எம் கியு-9 சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை தான் என்று சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. காஸாவில் மோதல் ஆரம்பித்த பிறகு அமெரிக்க ட்ரோன்களை ஹவுதிகள் சுட்டு வீழ்த்துவது இது மூன்றாவது முறையாகும். முன்பு நவம்பர் மற்றும் பெப்ரவரி மாதங்களில் இதேபோல அமெரிக்க ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்படும் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.

இந்தப் பகுதி சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் மிக முக்கியமானபாதையாக இருக்கும் நிலையில், ஹவுதி படை இப்படி தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்துவது அங்குப் பரபரப்பை உருவாக்குகிறது. இது சர்வதேச வர்த்தகத்தைச் சீர்குலைத்தது மட்டுமல்லாமல் இஸ்ரேலின் ஈலாட் துறைமுகத்தின் செயல்பாடுகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது.ஹமாஸ் மீதான இஸ்ரேல் போர் தொடங்கியது முதலே யெமனில் ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் மிகப் பெரியளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. பலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளை கண்டித்தும் ஹவுதி கட்டுப்பாட்டில் வசிப்போர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டங்கள் மிகப் பெரியளவில் தொடர்ந்து நடந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.