சூடு பிடிக்கும் இலங்கைத் தேர்தல்: ஜனாதிபதி வேட்பாளர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
ஜனாதிபதித் தேர்தலின் பரபரப்பான நிலையில், இதில் போட்டியிடத் தீர்மானித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இந்த தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரன் இஷான் ஜயவர்தன ஆகியோர் போட்டியிட தீர்மானித்துள்ளனர். இதனிடையே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவரும், நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சருமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு அந்தக் கட்சிகளால் அண்மையில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, எதிர்வரும் சில வாரங்களில் கோரிக்கை தொடர்பான தனது முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இதுவரை தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதித் தேர்தலில் மேலும் பல வேட்பாளர்கள் இணையவுள்ளனர்.ஜனாதிபதித் தேர்தலுக்கு அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் முன்வைக்கப்படுவது இதுவே முதல் சந்தர்ப்பம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.