புவிசார் அரசியல் மாற்றம் காண்கிறது, ஆயுத உற்பத்தியை விரைவுபடுத்துமாறு மக்ரோன் அழைப்பு
ஷெல் தொழிற்சாலைக்கு அடிக்கல் நட்டு அவர் உரை
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பாதுகாப்புத் தொழில் துறைகள் அதிக முக்கியத்துவம் பெறக்கூடியதான புவிசார் அரசியல் (geopolitical) – பூகோள மூலோபாய (geostrategic) – மாறுதலுக்குரிய ஒரு நீண்ட காலகட்டத்துக்குள் நாங்கள் வாழவிடப்பட்டுள்ளோம்.
உக்ரைனுக்கான எங்களது உதவிகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்கும் ஆயுதத் தொழில் துறையில் நிலைபேறான ஒரு மறுஆயுத மீளாக்கத்தை (rearmament) ஏற்படுத்துவதற்காகவும் நாங்கள் எங்களது ஆயுத உற்பத்திகளை விரைவுபடுத்தவேண்டி உள்ளது.
பிரான்ஸின் முக்கிய ஆயுதத் தொழில் நிறுவனங்களது தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய அதிபர் எமானுவல் மக்ரோன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
“பத்து ஆண்டுகளுக்கு முன்பு கிறீமியா வில் ரஷ்யாவின் தாக்குதலால் உலகம் மாற்றமடையத் தொடங்கியது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வேகமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ரஷ்யாவில் ஒர் ராணுவ ஆயுத மீள்உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகளிலும் இராணுவச் செலவீனங்களும் புதிய ஆயுத தளபாடங்களுக்கான கேள்வி கோரல் களும் அதிகரித்துவருகின்றன.
உலகம் எங்கும் புவிசார் அரசியல் மாற்றம்கண்டுவருகிறது.
“உக்ரைனுக்கான எங்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதற்காகப் போர்க்காலப் பொருளாதார அடிப்படையில் எங்கள் ஆயுதத் தொழிற் றுறை உற்பத்திகளை விரைவுபடுத்தவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதேசமயம் எங்கள் போர் ஆயுதங்களை மறுசீரமைக்க வேண்டியுள்ளது. போர் நாளை நின்று விடலாம். ஆனால் நாளைய உலகம் நாளையுடன் நின்றுவிடாது.. ” -இவ்வாறு மக்ரோன் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸின் இராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் தயாரித்து வழங்குகின்ற நகரம் பெர்ஜெராக் (Bergerac) ஆகும். நாட்டின் தென்மேற்கில் Nouvelle-Aquitaine பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்த நகரத்தை அண்டி ஏராளமான ஆயுதத் தளபாடத் தொழிற்சாலைகள், வெடிமருந்து கம்பனிகள் இயங்கிவருகின்றன.
அதிபர் மக்ரோன் முக்கிய அமைச்சர்கள் சகிதம் நேற்று முன்தினம் இந்த நகரத்துக்கு விஜயம் செய்திருக்கிறார். அங்கு ஐரோப்பாவின் மிக முக்கிய போராயுதங்களைத் தயாரிக்கின்ற யூரென்கோ நிறுவனத்தின் (Eurenco company) புதிய ஷெல் வெடிமருந்துத் தொழிற்சாலைக்கு அவர் அடிக்கல் நட்டார். அதன் பின்னர் ஆயுத தொழிற்சாலைகளது தலைவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
இந்த விஜயத்தின் போது அதிபருடன் பொருளாதார அமைச்சர் புருனோ லு மேயர் (Bruno Le Maire) , ஆயுதப்படைகளுக்கான (பாதுகாப்பு) அமைச்சர் செபஸ்ரியன் லுகோர்னு (Sébastien Lecornu) ஆகியோரும் உடன் சென்றனர்.
உக்ரைனுக்கான அமெரிக்காவின் ஆயுத உதவிகளை அந்நாட்டுக் காங்கிரஸ் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் உக்ரைன் படைகளது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து சாதனங்களின் கையிருப்புத் தீர்ந்து வருகிறது என அபாய எச்சரிக்கைகள் வந்துள்ளன. இவ்வாறான நிலவரத்தில் ஐரோப்பாவின் ஆயுத உதவிகளை மேலும் விரைவுபடுத்துவதற்கு மக்ரோன் முயற்சிக்கிறார். உக்ரைனுக்கு பிரான்ஸும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் வழங்கிய பீரங்கிகளுக்கான வெடிமருந்துகளுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.