பாதுகாப்பு ஆபத்து உச்சமாக இருப்பின் ஒலிம்பிக் தொடக்க விழா இடம்மாறும்!

பிளான் B, C உள்ளது மக்ரோன் அறிவிப்பு, "ஒலிம்பிக் போர்நிறுத்தம்" ஏற்படுத்த அவர் முயற்சி

Kumarathasan Karthigesu-பாரிஸ்
அதிபர் மக்ரோன் BFM மற்றும் RMC செய்திச் சேவைகளுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் போர் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் பதற்றங்களுக்கு மத்தியில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளது ஏற்பாடுகள் எந்த நிலைமையில் உள்ளன என்ற கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார்.
காஸா மோதல்கள், ஈரான் – இஸ்ரேல் முறுகல் , இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்கள் என்று உலகம் நாளாந்தம் போர்ப் பதற்றநிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இவ்வாறான நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளைப் பாதுகாப்பாக நடத்தி முடிக்க இயலுமா என்ற கேள்வியும் அச்சங்களும் நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. மக்ரோன் அதுகுறித்து விளக்கங்களை வழங்கியுள்ளார்.
முதல்தடவையாக அரங்குக்கு வெளியே பாரிஸின் செய்ன் நதி நீரின் மேல் திட்டமிடப்பட்டுள்ள திறந்த வெளித் தொடக்க விழாவை பாதுகாப்புக் காரணங்களால் அங்கு நடத்த முடியாமற்போனால் அதற்கான மாற்றுத் திட்டங்கள் தயாராக உள்ளன என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பி, சி என(plans B et des plans C) மாற்றுத் திட்டங்கள் உள்ளன. நாங்கள் அந்தந்த நேரத்து நிலைவரங்களை ஆராய்ந்து முடிவுசெய்வோம். வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையான பார்வையாளர்களுடன் – செய்ன் நதி முழுவதையும் உள்ளடக்காத விதமாகப்- பாரிஸ் நகரின் Trocadéro பகுதியில் அல்லது வழக்கமாக நடந்து வருகின்ற முறைப்படி Stade de France விளையாட்டு அரங்கத்தின் உள்ளே தொடக்கவிழா மற்றும் நிறைவு விழாக்களை நடத்துவதற்கான மாற்றுத் திட்டங்கள் கைவசம் உள்ளன – என்று அவர் கூறியிருக்கிறார். ஆயினும் திறந்த வெளியில் ஆரம்பவிழாவைச் செய்கின்ற ஏற்பாட்டில் இப்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “உலகில் இது முதல் முறை. எங்களால் அதனைச் செய்யமுடியும். செய்துகாட்டுவோம்” – என்று உறுதி அளித்தார்.
பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தலை ஏற்றுக்கொண்ட அவர், “கனவு காண்பதில் இருந்து எங்களைத் தடுப்பதும் பயங்கரவாதிகளது நோக்கங்களில் ஒன்று” என்று தெரிவித்தார். திறந்த வெளித் தொடக்க விழாவுக்கு மிகப் பெருமெடுப்பிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் நன்கு பரிசோதிக்கப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மக்ரோன் குறிப்பிட்டார்.
⚫இஸ்ரேல் – ஈரான்
சனி-ஞாயிறு இரவுப் பொழுதில் இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட- இதற்குமுன்பு இடம்பெற்றிராத – ஏவுகணத் தாதாக்குதல் குறித்தும் மக்ரோன் முதன்முறையாகக் பதிலளித்துள்ளார். ஈரானைத் “தனிமைப்படுத்துகின்ற” அதேசமயம் மோதலை விரிவுபடுத்தாமல் இருக்க இஸ்ரேலைச் “சமாதானப்படுத்த” விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
சனி இரவுத் தாக்குதலின் போது ஜோர்தான் நாட்டின் வேண்டுகோளின் பேரில் பிரான்ஸ் தலையீடு செய்து ஏவுகணைகளை “இடைமறித்தது” என்பதை மக்ரோன் உறுதிப்படுத்தினார்.
⚫ஒலிம்பிக் போர் நிறுத்தம்
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்ற காலப்பகுதியில் உலகெங்கும் குறிப்பாக உக்ரைன், காஸா, சூடான் போன்ற பகுதிகளில் போர் நிறுத்தங்கள் ஊடாக அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற தகவலையும் மக்ரோன் வெளியிட்டார்.
“ஒலிம்பிக் காலப் போர்நிறுத்தத்துக்காக முயற்சித்து வருகின்றோம்.இது விடயத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் (Xi Jinping) சந்தித்து உதவி கோரவுள்ளேன்” – என்றார் மக்ரோன்.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">