இலங்கை – இந்தியா இடையே தரைவழிப் பாலம் நிர்மாணிப்பதற்கான பிரதிநிதிகள் குழுவை நியமிக்க அரசு இணக்கம்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தரை வழிப் பாலத்தினை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை சார்பில் பிரதிநிதிகள் குழுவொன்றை நியமிக்குமாறு இந்தியா இலங்கையிடம் கோரியமைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் கடந்த 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் புதுடில்லியில் கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது. இதன்போதே இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.2015ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரிக்கும் இடையில் தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் தரைவழிப்பாலம் ஒன்றை அமைப்பதற்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், சுமார் ஒரு தசாப்த காலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த விடயம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஇ இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுக்களை நடத்தியபோது மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பு பற்றிய இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து, பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதன் பிரகாரம்இ இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையில் அமைக்கப்படவுள்ள இந்தப் பாலமானது 23 கிலோ மீற்றர் நீளத்தினை கொண்டுள்ளதாகும். இதில் வீதி மற்றும் ரயில் பாதை என்பனவும் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.