அனுரவிற்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் அடுத்தவாரம் விசேட சந்திப்பு
தேசியக் மக்கள் சக்திக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அடுத்த வாரம் கொழும்பில் இடம்பெற உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை கோரும் வகையில், அனுரகுமார திஸாநாயக்க பல்வேறு நகர்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் வடபகுதிக்கு சென்றிருந்த அனுர, அங்கு பல்வேறு சந்திப்புகளிலும் ஈடுபட்டிருந்தார். அதேபோன்று அவர் கடந்தவாரம் கனடாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது புலம்பெயர் தமிழ் மக்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். இவ்வாறான பின்புலத்தில் தமிழ் மக்களின் ஆதரவை பெறும் மற்றுமொரு முயற்சியாக தமிழரசுக்கு கட்சியின் பிரதிநிதிகளுடனும் அனுர கலந்துரையாட உள்ளார். இதுகுறித்து கொழும்பில் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்து ஆதரவைக் கோரவுள்ளதாக அறிவித்துள்ளமை தொடர்பில் சுமந்திரனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘அடுத்த வாரம் அவர்கள் எம்மைச் சந்திக்கவுள்ளதாகக் கூறினார்.
அவர்களோடு மட்டுமல்ல ஏனைய பல கட்சிகளுடனும் நிறைய சந்திப்புக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், ஜனாதிபதித் தேர்தல் என்று வருகின்றபோது அதில் யார், யார் வேட்பாளர்கள் என அறிவிக்கப்படுகின்றபோது நாங்கள் உரிய சந்திப்புக்களை மேற்கொண்டு முடிவைத் தீர்மானிப்போம். இவ்வாறான நிலைமையில்தான் தேசிய மக்கள் சக்தியினர் எம்மைச் சந்திக்கப் போவதாகச் சொல்லியுள்ளனர். எனவே, எம்மைச் சந்திக்க வருகின்ற எல்லோரையும் நாங்கள் சந்திப்போம்’ என்று பதிலளித்தார்.