செய்ன் நதியோர பழைய புத்தகப் பெட்டகங்களை அகற்றவேண்டாம்! மக்ரோன் உத்தரவு.
கடைக்காரருக்கு வெற்றி
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பாரிஸின் செய்ன் நதியோரம் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பழைய புத்தகப் பெட்டிக்கடைகளை அகற்றுவதைக் கைவிடுமாறு அதிபர் மக்ரோன் பணித்திருக்கிறார். எலிஸே மாளிகை இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.
ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டுப் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தப் பெட்டிக் கடைகளைப் பெயர்த்து எடுத்து இடம்மாற்றுவதற்கான முயற்சிகளைப் பாரிஸ் பொலீஸ் தலைமையகம் மேற்கொண்டிருந்தது.
நானூறுக்கும் மேற்பட்ட பெட்டிகள் நதிக் கட்டில் இருந்து இறக்கப்பட்டிருந்தன. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த கடைக்காரர்கள் இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லத் தயாராகி வந்தனர். இந்த நிலையிலேயே எலிஸே மாளிகையின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஒலிம்பிக் போட்டிகளின் கோலாகலத் தொடக்க விழா செய்ன் நதியில் – திறந்த வெளியில் – தண்ணீரின் மேலே படகுகளில் – நடத்தப்பட இருப்பது தெரிந்ததே. அதனைக் கண்டு களிப்பதற்காக உலகெங்கும் இருந்து பல லட்சம் ரசிகர்கள் பாரிஸ் நகரில் அணிதிரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் மிகச் சவாலான பாதுகாப்புப் பணிகள் இப்போதிருந்தே திட்டமிடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு கட்டமாக தொடக்க விழாப் பகுதியில் – நதிக்கட்டுகளில் – நீண்ட வரிசையில் காணப்படும் புத்தகக் கடைகளை அங்கருந்து தற்காலிகமாக வேறு ஓர் பகுதிக்குக் கொண்டு சென்று நிறுவ பாரிஸ் நகர சபை நிர்வாகம் தீர்மானித்திருந்தது. புத்தகக் கடைகளை இயக்கிவருவோருக்கு அது தொடர்பான முன்னறிவித்தல் விடுக்கப்பட்டதை அடுத்துக் கடைகளை அங்கிருந்து இடம்மாற்றும் திட்டத்துக்கு அவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுவந்தனர்.
நதியோரக் கட்டுகளில் நடைபாதையை நோக்கியவாறு அமைந்துள்ள பச்சைப் பெட்டிக் கடைகள் இன்று நேற்று அல்ல. ஐந்து நூற்றாண்டுகளாக அதேஇடத்தில் பாரிஸ் நகரின் பிரிக்க முடியாத ஒரு பாரம்பரிய அடையாளமாக இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்தப் புத்தகக் கடைகளைத் தலைமுறை தலைமுறையாக அங்கு நடத்தி வருகின்றவர்களை “Bouquinistes” என்று அழைக்கின்றனர்.