பாரிஸிலேயே தங்கியிருங்கள்.. அற்புத நிகழ்வுகளை அனுபவியுங்கள்!
ஒலிம்பிக் கோலாகலத்தை"மிஸ்" பண்ண வேண்டாம்! மேயர் கிடல்கோ அழைப்பு
பாரிஸின் புறநகராகிய போர்த்-து-லா சப்பேலில் (Porte de la Chapelle) ஒலிம்பிக் போட்டிகளில் சிலவற்றை நடத்துவதற்காகப் புதிதாக நிறுவப்பட்ட உள்ளரங்கத்தின்(Adidas Arena) திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு அரங்கத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே சோசலிஸக் கட்சியின் மேயர் கிடல்கோ இவ்வாறு கூறினார். ஒலிம்பிக் காலத்தில் நகரம் அற்புதமாகத் திகழும். அவ்வேளை நகரை விட்டுச் செல்வது புத்திசாலித்தனமானது அல்ல – என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாரிஸில் மிகவும் பின்தங்கிய பகுதி போர்த்-து-லா சப்பேல் (Porte de la Chapelle). வீஸா இல்லாத வெளிநாட்டுக் குடியேறிகள் நிரம்பிய பகுதி அது. அவர்களில் பலர் அங்குள்ள தெருக்களில் வசிப்பது வழமை. ஒலிம்பிக் போட்டிகளை ஒட்டி அந்தப் பகுதி புனர்நிர்மாணம் செய்யப்பட்டுப் புத்தெழில் பெற்றுள்ளது. அங்கு திறந்து வைக்கப்பட்ட புதிய உள்ளரங்கிலேயே பட்மின்ரன் (badminton) மற்றும் தாள-லய ஜிம்னாஸ்டிக் (rhythmic gymnastics) போன்ற போட்டிகள் நடத்தப்படவுள்ளன. எட்டாயிரம் முதல் ஒன்பதாயிரம் வரையான இருக்கை வசதி கொண்ட இந்த அரங்கு அடிடாஸ் (Adidas) நிறுவனத்தின் அனுசரனையுடன் மிகக் குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னமும் 200 நாள்கள் வரையே உள்ளன. போட்டிக் காலத்தில் நகரத்துக்கு வந்து குவியவுள்ள பல லட்சக் கணக்கான வெளிநாட்டு ரசிகர்களால் பொதுப் போக்குவரத்துகள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் சவால் காணப்படுகிறது. அதனைச் சமாளிப்பதற்காகப் பாரிஸ் வாசிகளது நடமாட்டங்களைக் கட்டுப்படுத்துவது உட்படப் பல்வேறு திட்டங்களை ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.