ஆப்கானிஸ்தான் அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை 155 ஓட்டங்களால் அபார வெற்றி.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகலையில் இன்று (11) நடைபெற்ற 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 155 ஓட்டங்களால் இலங்கை  அணி வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை ஒரு போட்டி மீதம் இருக்க 2 – 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை தனதாக்கிக்கொண்டுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்ப வீரர்கள் இருவரையும் 36 ஓட்டங்களுக்கு இழந்தது.

முதலாவது போட்டியில் இரட்டைச் சதம் குவித்து சாதனை நிலைநாட்டிய பெத்தும் நிஸ்ஸன்க (18), அரைச் சதம் பெற்ற அவிஷ்க பெர்னாண்டோ (5) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

எனினும் அணித் தலைவர் குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்களைப் பெற்றதுடன் 3ஆவது விக்கெட்டில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைக் கட்டியெழுப்பினர்.

குசல் மெண்டிஸ் 61 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 52 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைத் தொடர்ந்து சரித் அசலன்க, ஜனித் லியனகே ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 111 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

ஜனித் லியனகே 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபின்னர் வவிந்து ஹசரங்கவுடன் 6ஆவது விக்கெட்டில் மேலும் 50 ஓட்டங்களை சரித் அசலன்க பகிர்ந்தார்.

சரித் அசலன்க 74 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 97 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் அஸ்மத்துல்லா  ஓமர்ஸாய் 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

309 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 33.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 153 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

மொத்த எண்ணிக்கை 31 ஓட்டங்களாக இருந்தபோது ரஹ்மத்துல்லா குர்பாஸ் (8) ஆட்டம் இழந்தார்.

அதனைத் தொடர்ந்து இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு சோதனையைக் கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அவர்கள் இருவரது துடுப்பாட்ட உதவியுடன் ஆப்கானிஸ்தான் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 128 ஓட்டங்களைப் பெற்று சிறந்த நிலையில் இருந்தது.

ஆனால், இப்ராஹிம் சத்ரான் 54 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் எஞ்சிய விக்கட்கள் விரைவாக சரிந்தன.

ரஹ்மத் ஷா 63 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆப்கானிஸ்தானின் கடைசி 9 விக்கெட்கள் 25 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டில்ஷான் மதுஷன்க 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக  சரித் அசலன்க தெரிவு செய்யப்ட்டுள்ளார்.