திங்கள் முதல் வீதிகளை மறித்துத் தலைநகரை முடக்க விவசாயிகள் திட்டம்!

அரசின் 10 அம்சத் தீர்வில் அவர்கள் திருப்தியில்லை ,நீடிக்கின்றது போராட்டம்

Kumarathasan Karthigesu-பாரிஸ்
பாரிஸ் நகரத்திலும் அதன் உட்புறங்களிலும்(Paris et de la petite couronne parisienne) திங்கட்கிழமை முதல் காலவரையறையற்ற வீதி மறியல் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக விவசாயிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் பெரும்பான்மையான விவசாயிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற FNSEA அமைப்பும் பாரிஸ் பெரும் பாக இளம் விவசாயிகளும் (Jeunes Agriculteurs du Grand Bassin Paris) சனிக்கிழமை மாலை விடுத்த கூட்டறிக்கை ஒன்றில் இத் தகவல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
“… இது 12-15 மணித்தியாலங்கள் நீடிக்கின்ற நடவடிக்கையாக அல்லாது ஐந்து நாட்களுக்கும் கூடிய முடக்கமாக இருக்கும். விவசாயிகள் வாழ வேண்டும் என்பதையும் கிராமப் புறங்கள் இன்றிப் பாரிஸ் தனித்து இயங்கிவிடமுடியாது என்பதையும் பாரிஸ் நகரவாசிகள் உணர்ந்து கொள்வதை இந்த நடவடிக்கை சாத்தியமாக்கும். காலத்துக்குக் காலம் நாங்கள் ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம்.

பிரதமர் எங்களை மறந்துவிட்டார்… “-இவ்வாறு இளம் விவசாயிகளது தேசிய நிர்வாகிகளில் ஒருவர் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

பாரிஸ் முற்றுகையின் போது வீட்டில் இருந்துபணியாற்றுமாறு (telework) அவர் நகர மக்களைக் கேட்டிருக்கிறார்.

கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கின்ற விவசாயிகளது போராட்டங்களைத் தணித்து முடிவுக்குக் கொண்டுவருவதற்காகப் பிரதமர் கப்ரியேல் அட்டால் கடந்த வெள்ளிக்கிழமை பத்து அம்சத் திட்டம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அது தங்களது கோரிக்கைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்று கூறியிருக்கின்ற விவசாய அமைப்புகள், போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன.

பாரிஸ் நகரை முற்றாக முடக்கும் வகையில் திங்கட்கிழமை பிற்பகல் இரண்டு மணி முதல் மறியல்கள், வீதித் தடைகள் போடப்படும். அந்தப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னராகச் சனி – ஞாயிறு இரு தினங்களிலும் சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் விவசாயிகளைக் கேட்டிருந்தனர். அதனையடுத்துப் பாரிஸ் பிராந்தியத்துக்குள் உள் நுழையும் மற்றும் வெளி அகலும் பாதைகளில் வெள்ளிக்கிழமை மாலை முதல் போடப்பட்டிருந்த வீதித் தடைகளில் பெரும்பாலானவை நேற்றுச் சனிக்கிழமை பகல் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தன.
வீதிகளில் வாகனப் போக்குவரத்துகள் வழமைக்குத் திரும்பியிருந்தன. எனினும் நாட்டின் பல பிராந்தியங்களில் ஆங்காங்கே வீதி மறியல்கள் நீடித்துவருகின்றன.

பிரதமரது தீர்வு அறிவிப்புகள் சரியான திசையில் செல்கின்றன என்றாலும் விவசாயிகள் சமூகத்தின் விசாலமான பரந்துபட்ட எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வனவாக இல்லை என்று சங்கங்கள் அதிருப்தி வெளியிட்டிருக்கின்றன.

பிரதமர் கப்ரியேல் அட்டால் இரண்டாவது தடவையாக இன்று ஞாயிற்றுக்கிழமை மறியல்போரில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைச் சந்திக்கின்ற விஜயமாக Indre-et-Loire என்ற இடத்தில உள்ள விலங்குப் பண்ணை ஒன்றுக்குச் செல்லவுள்ளார்.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">