ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளின் சொத்துவிபரங்களைத் திரட்ட நடவடிக்கை:

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளின் சொத்து விபரங்களை பெற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் (150,000) அளவிலான அரச சேவையில் உள்ள உயர் அதிகாரிகள், ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்டோரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான விபரங்களைப் பெற்றுக் கொள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 2023ஆம் ஆண்டு 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் அதிகாரத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் 80(1) பிரிவின்படி, ஜனாதிபதி, பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள் மற்றும் சட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட 31 துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 க்கு முன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் தமது சொத்துக்கள் அல்லது பொறுப்பு தொடர்பான அறிக்கைகளை வழங்க வேண்டும்.

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் தலைவர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளை பெற்றுக்கொள்ள ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை இதன் விசேட அம்சமாகும்.

இதன்படி, பத்திரிகை கட்டளைச் சட்டத்தின் 2வது பிரிவின் கீழ் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ள பத்திரிகை உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பீட அங்கத்தவர்கள் மற்றும் 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் 17 வது பிரிவின் கீழ் அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள பெற்ற ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பீட உறுப்பினர்கள் , கீழே குறிப்பிட்டுள்ளபடி வருடாந்திர சொத்துக்கள் மற்றும் கடன் தொடர்பான அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும்.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான சமர்ப்பணங்களை வழங்கும் நபர் கணவனாக இருந்தால், மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும், மனைவி கணவன் மற்றும் குழந்தைகள் மற்றும் அவர்களுடன் பொதுவான வீட்டில் வசிக்கும் பிற நபர்கள் தொடர்பிலும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு இலத்திரனியல் முறையின் ஊடாக சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் தொடர்புடைய தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்க சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும். ஆனால் அதற்கான நிதியொதுக்கீடுகள் இன்னும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கவில்லை என அதன் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திகதிக்குள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு எதிராக நீதிவான் முன்னிலையில் வழக்குத் தொடரப்படலாம்.

குற்றவியல் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்க இந்தச் சட்டம் நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.