லண்டனில் நாளை சுடரி ஈழத்தமிழ் பெண்களுக்கான அங்கிகார விருது விழா.
பிரித்தானியாவில் தமிழ் மகளீர் முன்னேற்ற மன்றத்தினால் பிரித்தானியா வாழ் இலங்கைத்தமிழ் பெண் சாதனையாளர்களை அடையாளப்படுத்தி பெருமையளிக்கும் மாபெரும் விருது விழா நாளை லண்டன் ஹரோ பகுதயில் அமைந்துள்ள பைரன் ஹோலில் நடைபெற உள்ளது. புலம்பெயர்ந்து பல சவால்களோடு வாழ்ந்தாலும், தொழிற்றுறையில், கலையிலக்கியச் செயற்பாடுகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில், பொருண்மிய மேம்பாட்டில் என பல்வேறு துறைகளில் கோலோச்சும் பெண்கள் அடையாளம் கண்டு சாதனையாளர்களாக சுடரி விருதினைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்தே கோரப்பட்டன.
இந்த நிலையில்290 விண்ணப்பங்கள் கிடைக்கப்ப பெற்ற 118 பேர் தேர்விற்குள்ளாகி இவர்களில் 96 பேர் இறுதி விழாவில் மாண்பேற்றப்படவுள்ளார்கள். புள்ளிகளின் அடிப்படையில் ஒவ்வொரு துறையிலும் முதல் நான்கு மதிப்பெண் பெற்றவர்கள் ஆளுமை மிகு பெண்களாக சுடரி மேடையை அலங்கரிக்கின்றனர்.
ஒவ்வொரு துறையிலும் நால்வரில் யார் சுடரி விருதினை பெற்றுக் கொள்ளப் போகின்றார் என்பது நாளை சுடரி விருதுவிழாவில் அறிவிக்கப்படவுள்ளது. தமிழ் மகளிர் முன்னேற்ற மன்றத்தால் தெரிவுசெய்யப்பட்ட 5 பேர் அடங்கிய ‘பிரத்தியேக தெரிவுக்குழு’ இந்த தெரிவினை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
இந்த விருதானது பரிந்துரைக்கப்பட்டவரின் செயன்முறை , தமிழ்ச் சமூகத்துக்கான அவர்களின் பங்களிப்பு, சமூக அக்கறை மேம்பாடு கருதிய அவர்களின் நோக்கு, எதிர்பார்ப்பற்ற அவர்களின் அர்ப்பணிப்புக்குமே கணிசமான புள்ளிகள் வழங்கப்படுகின்றது. அதே வேளை தனது தொழில்துறை மூலமாக அவர் தமிழ்ச் சமூகத்தோடு எப்படியான உறவைப் பேணுகின்றார் என்பதையும் உற்று நோக்குகின்றது என விழா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ரோசினி றமேஸ் தெரிவித்துள்ளார்.
வர்க்க பேதங்களைக் கடந்து, பெண்களைக் கொண்டாடி அடையாளப்படுத்த விளையும் இந்த விருது விழாவிற்கான நுழைவுச் சீட்டுகள் முழுவதும் விற்பனையாகி விட்டதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஈழப் பெண்களை கௌரவிக்கும் சுடரி விழா ஏற்பாட்டாகளையும் மாண்பேற்றப்படவிருக்கும் பெண்களையும் மெய்வெளி ஊடகம் வாழத்தி நிற்கின்றது.