போயிங் 737 ‘மேக்ஸ்’ 9 ரக விமானங்கள் பறப்பதற்குத் தடை.
அமெரிக்காவின் மத்திய விமானத்துறை நிர்வாகம் போயிங் 737 ‘மேக்ஸ் 9’ ரக விமானங்கள் பறப்பதற்கு விதித்துள்ள தடையை நீட்டித்துள்ளது.
விமானக் கதவு ஒன்று நடுவானில் பெயர்ந்து விழுந்ததைத் தொடர்ந்து போயிங் மீதான கண்காணிப்பை அதிகரிக்கப்போவதாக அது அறிவித்தது.
ஜனவரி 16ஆம் திகதிவரை யுனைடெட் ஏர்லைன்சும் அலாஸ்கா ஏர்லைன்சும் விமானச் சேவைகளை ரத்துசெய்திருக்கும் நிலையில், அவற்றை மீண்டும் தொடங்குவதற்கு முன்னர் மேலும் ஒரு முறை சோதனைகளை நடத்தவேண்டியிருக்கும் என்று மத்திய விமானத்துறை நிர்வாகம் தெரிவித்தது.
அண்மைய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட விமானத்தைப் போன்ற மற்ற 171 விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தொடர் தடை, அமெரிக்கப் பயணிகளின் பாதுகாப்புக்காகச் செய்யப்பட்டது என்று அது கூறியது. அவை சோதிக்கப்பட்ட பிறகு அந்தத் தடை அகற்றப்படும் என்றும் அது தெரிவித்தது.
40 விமானங்கள் மீண்டும் சோதிக்கப்பட வேண்டும் என்று மத்திய விமானத்துறை நிர்வாகம் கூறியது. அதன் பிறகு அது முடிவுகளை மறுஆய்வு செய்து, ‘மேக்ஸ் 9’ ரக விமானங்களை மீண்டும் செயல்படுத்த போதுமான பாதுகாப்பு இருக்கின்றதா என்பதை உறுதிசெய்யும் என்றும் அறிவித்துள்ளது.