பெய்ரூட் மீது திடீர்த் தாக்குதல்! ஹமாஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் உயிரிழப்பு!!
இஸ்ரேலிய ட்ரோன் அதிரடி பாலஸ்தீனியர்கள் அதிர்ச்சி
Kumarathasan Karthigesu-பாரிஸ்
மத்திய கிழக்கில் போர் அச்சமூட்டும் விதமாக விரிவடைகிறது. லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்திருந்த ஹமாஸ் அலுவலகம் ஒன்றின் மீது இஸ்ரேலிய இராணுவம் எல்லை தாண்டி மிகத் துல்லியமான தாக்குதல் ஒன்றை நடத்தியிருக்கிறது.
அந்தத் தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவை நிறுவியவர்களில் ஒருவரும் அந்த அமைப்பின் இரண்டாவது நிலையில் உள்ள தலைவருமாகிய சாலே அல் அரூரியும்(Saleh al-Arouri) உயிரிழந்தவர்களில் ஒருவர் என்று அறிவிக்கப்படுகிறது.
மேற்குக் கரையில் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாளராக முன்னர் விளங்கிய தலைவர் சாலே-அல்-அரூரியின் மரணத்தை ஹமாஸ் இராணுவப் பிரிவு உறுதிப்படுத்தியிருக்கிறது. அவரது திடீர் இழப்பு”தங்களது போராட்டத்தை நிறுத்திவிடமாட்டாது ” என்று அந்த இயக்கம் சூளுரைத்துள்ளது. ஹமாஸ் துணைத் தலைவரது மறைவு பாலஸ்தீனியர்களைப் பெரும் அதிர்ச்சிக்குள் தள்ளியிருக்கிறது.
படம் :தாக்குதல் நடந்த கட்டடப் பகுதி –
இன்று செவ்வாய்க்கிழமை மாலை பெய்ரூட் நகருக்குத் தெற்கில் ஹமாஸ் அலுவலகம் அமைந்திருந்த கட்டடத்தில் இடம்பெற்ற பெரும் வெடிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அது இஸ்ரேலிய இராணுவத்தினர் ட்ரோன் மூலமாக எல்லை தாண்டி லெபனானுக்குள் நடத்திய எதிர்பாராத அதிரடி என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பலத்த சேதமடைந்த கட்டடம் தீப்பற்றி எரிகின்ற வீடியோக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
பல்வேறு தாக்குதல்களின் மூளையாகச் செயற்பட்டவர் என்று இஸ்ரேலியர்களால் குற்றம் சுமத்தப்பட்ட சாலே-அல்-அரூரி, ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் துணைத் தலைவராக 2017 ஆம் ஆண்டில் தெரிவாகியிருந்தார்.
பின்னர் அந்த இயக்கத்தின் இரண்டாவது நிலைத் தலைவராக அறிவிக்கப்பட்டார். இருபது ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேலியச் சிறைகளில் இருந்த அவர் 2010 இல் லெபனானுக்குள் சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ் வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டிருந்தார்.
சாலே-அல் – அரூரியைக் கொல்வோம் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நத்தன்யாகு சமீப நாட்களாக எச்சரிக்கை விடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.