ரோக்கியோவில் இரு விமானங்கள் மோதுண்டு எரிந்தன!

ஓடுபாதையில் பெரும் தீ! 380 பயணிகள் தப்பினர்!! நில அதிர்வுக்கு மத்தியில் அங்கு மற்றோர் அனர்த்தம்

Kumarathasan Karthigesu-பாரிஸ்

ஜப்பானின் தலைநகர் ரோக்கியோவில் உள்ள ஹனெடா விமான நிலையத்தில் (Haneda Airport) இரண்டு விமானங்கள் மோதுண்டு எரிந்து அழிந்த காட்சிகள் உலகெங்கும் வெளியாகிக் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஜப்பானிய எயார் லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எயார் பஸ்(Airbus A350) விமானம் ஒன்றும் நாட்டின் கரையோரக் காவல் படை விமானம் ஒன்றுமே ஓடுபாதையில் மோதி வெடித்துத் தீப்பிளம்புகளாக எரிந்துள்ளன.

கரையோரக் காவல் படை விமானத்தில் இருந்த ஐந்து வீரர்களும் உயிரிழந்துள்ளனர். அந்த விமானம் புத்தாண்டு தினமாகிய நேற்றுமுன்தினம் பெரும் நிலநடுக்கங்கள் தாக்கிய நாட்டின் மத்திய நொரோ(Noto region) பிராந்தியத்துக்கு அவசரகால உதவிப் பொருள்களை விநியோகிக்கின்ற பணியில் ஈடுபட்டிருந்தது என்று கூறப்படுகிறது.

விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானம் அங்கு தரித்து நின்றிருந்த கரையோரக் காவல்படை விமானத்துடன் மோதியதாக முதலில் வெளியாகிய தகவல்கள் தெரிவித்தன.

பயணிகள் விமானம் விளாசி எரிந்து கொண்டிருந்த நிலையில் அதிலிருந்த 379 பயணிகளும் பணியாளர்களும் அவசரகால வழிகள் ஊடாகப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஜப்பானிய விமான சேவை நிறுவனம் (Japan Airlines) தெரிவித்திருக்கிறது. பல பயணிகளுக்குச் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

எயார் பஸ் நிறுவனத்தின் A350 ரக விமானங்களில் உள்ள பாதுகாப்பு வசதிகளே இந்தப் பேரழிவு அனர்த்தத்தில் பெரும் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவியுள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த விமானத்தின் உள்ளே சிக்குண்டு அவசர கால வழிகள் ஊடாகப் பாய்ந்து வெளியே தப்பியோர் பலரும் தாங்கள் நரகத்தில் இருந்து உயிருடன் மீண்டிருக்கின்றனர் என்று பயங்கர அனுபவத்தை விவரித்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பணியில ஈடுபடுத்தப்பட்டனர். விமான நிலையத்துடனான சகல வான் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன.

ரோக்கியோ-ஹனடா (Tokyo-Haneda) விமான நிலையம் ஜப்பானியத் தலைநகரில் உள்ள இரண்டு முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாகும்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">