அடக்குமுறை குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ரஞ்சன்

தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் அடக்குமுறைகள் மற்றும் கைதுகள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, இன்றைய தினம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலையான ரஞ்சன் ராமநாயக்க பதிலளிக்க மறுதளித்துள்ளார்.

சிறையில் இருந்து விடுதலையானதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பில் அடக்குமுறை குறித்த கேள்விக்கு சிறிது மௌனம் காத்த ரஞ்சன் ராமநாயக்க கருத்துகள் எதனையும் வெளியிட விரும்பவில்லை மழுப்பலான பதிலை வழங்கினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையான ரஞ்சன் ராமநாயக்க நடத்திய ஊடக சந்திப்பில் அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஆகிய விடயங்கள் குறித்து உங்கள் கருத்து என்னவென ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

சில நொடிகள் மௌனம் காத்த ரஞ்சன் ராமநாயக்க, உங்கள் கேள்வியை செவி மடுக்கையில் சரியான பதில் ஞாபகத்திற்கு வருகின்ற அதேவேளை, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் ஞாபகத்திற்கு வருவதாக தெரிவித்தார்.

எனினும் மழுப்பலான பதில் ஒன்றை தான் வெளியிட நினைப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் ஐஸ்கிறீம் விற்பனையாளரைப் போன்று ஒரு மழுப்பலான பாதகமில்லாத பொய்யான பதிலை வழங்கும் எண்ணமொன்று ஏற்படுவதாகவும், அது தான் இரண்டாவதாக தெரிவிக்க நினைத்த பதிலைவிட பொய்யான ஒன்றாக அமையும் எனவும், எனவே இந்த கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை எனவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றம் சாட்டப்பட்டு  தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) கையெழுத்திட்டார்.

எதிர்காலத்தில் நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் எந்தவொரு கருத்தை தெரிவிக்கவோ செயற்படவோ கூடாது என்ற நிபந்தனையுடன் பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

2017  ஓகஸ்ட் 21 ஆம் திகதி அலரிமாளிகைக்கு வெளியே நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்தமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 2021 ஜனவரி 12  ஆம் திகதியன்று ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக மன்னிப்பு கோரி, ரஞ்சன் ராமநாயக்க சத்தியக் கடதாசியொன்றை நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

தான் தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் பிழையானவை என்றும் அந்தக் கருத்துக்களினால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறையினர் அனைவருக்கும் அகௌரவம் ஏற்பட்டமைக்காக மன்னிப்புக் கோருவதாகவும் குறித்த சத்தியக் கடதாசி மூலம் தெரிவித்திருந்தார்.

தான் கூறிய கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவற்றை மீளப் பெறுவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிக்கமாட்டேன் என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த சத்தியக்கடதாசியில் மேலும் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.